ஐரோப்பாவில் மற்றொரு கொரோனா அலை தொடங்கியிருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
ஐரோப்பாவில் பரவலாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அங்கு மற்றொரு கொரோனா அலை தொடங்கியிருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பா தலைவர் ஹான்ஸ் க்ளூக் மற்றும் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையத்தின் இயக்குனர் ஆண்ட்ரியா அம்மோன் ஆகியோர் இணைந்து இன்று கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அந்த கூட்டறிக்கையில், “ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த சூழ்நிலையில் நாம் தற்போது இல்லை என்றாலும், கொரோனா தொற்று நோய் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது தெளிவாகிறது. துரதிர்ஷ்டவசமாக ஐரோப்பாவில் கொரோனா எண்ணிக்கை மீண்டும் உயர்ந்து வருகிறது. இது மற்றொரு தொற்றுநோய் அலை தொடங்கியுள்ளதை கூறுகிறது. ஐரோப்பா முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடாமல் உள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.