போராட்டக்காரர்கள் தாமாகவே அடங்க வேண்டும்; இல்லையேல் அரசு அடக்கியே தீரும்!

“அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் தாமாகவே அடங்க வேண்டும். இல்லையேல் அவர்களை அரசு அடக்கியே தீரும்.”
இவ்வாறு முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எச்சரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ராஜபக்சக்களும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினரும் வீழ்ந்து விட்டார்கள் என்று போராட்டக்காரர்கள் தப்புக்கணக்குப் போடக்கூடாது.
நாங்கள் அமைதியாகவே ஒதுங்கி நின்றோம். தொடர்ந்து அமைதி காக்க நாங்கள் தயார் இல்லை. எம்மைச் சீண்டுவோருக்குத் தக்க பதிலடி கொடுக்க நாங்கள் தயார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சிதான் இன்னமும் தொடர்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எமது பக்கமே வந்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்த்தனவும் எமது கூட்டணியைச் சேர்ந்தவரே.
அரசுக்கு எதிராகப் போராடுவோர் உண்மையான போராட்டக்காரர்கள் அல்லர். அவர்கள் கொடிய வன்முறையாளர்கள். அவர்கள் கடந்த மே 9 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினர்களின் வீடுகளை எரித்து தங்கள் காடைத்தனத்தை நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.
கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களின் மறைமுக ஆதரவுடனும், வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்களின் பண உதவியுடனும்தான் அரசுக்கு எதிராக அவர்கள் போராடுகின்றனர்.
இந்தப் போராட்டக்காரர்கள் தாமாகவே அடங்க வேண்டும். இல்லையேல் அவர்களை அரசு அடக்கியே தீரும்” – என்றார்.