எதிரணி ஒப்பாரி வைப்பதால் எந்த நன்மையும் கிடைக்காது! – எந்தத் தேர்தல் நடந்தாலும் ‘மொட்டு’வே வெற்றிவாகை சூடும் என்கிறார் பிரசன்ன.
“நாட்டில் எந்தத் தேர்தல் நடந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிதான் வெற்றியடையும். தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என்று எதிரணியினர் ஒப்பாரி வைப்பதால் அவர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை.”
– இவ்வாறு ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
‘குறுகிய நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக உள்ளூராட்சி சபைத் தேர்தலையோ அல்லது எந்தவொரு தேர்தலையும் ஒத்திவைக்க ஜனாதிபதி செயற்பட்டால், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஜனநாயக ரீதியில் அதற்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு நடவடிக்கையையும் எடுக்கத் தயங்கமாட்டோம்’ என்று எதிர்க்கட்சிகள் விடுத்துள்ள எச்சரிக்கை தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் ஊடகங்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் பெரும்பாலானவை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வசமே உள்ளன. தேர்தல் நடந்தாலும் அந்தச் சபைகள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வசமே மீளவும் வரும்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் மட்டுமல்ல மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் நடந்தாலும் ‘மொட்டு’க் கட்சியே வெற்றிவாகை சூடும்.
ஏன் ஜனாதிபதித் தேர்தல் நடந்தாலும் எமது கட்சியின் வேட்பாளரே அரியணை ஏறுவார்.
தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என்று எதிரணியினர் ஒப்பாரி வைப்பதால் அவர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை.
நாடு மீதும், மக்கள் மீதும் அவர்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால் நாட்டை மீளக்கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்க அவர்கள் முன்வரவேண்டும்.
நாட்டின் நிலைமை ஓரளவு சரி வந்த பின்னர் – தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவந்த பின்னர் தேர்தல்களை உரிய காலங்களில் நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி உத்தரவு வழங்குவார்” – என்றார்.