இலங்கையில் கோடிக்கணக்கான பண மோசடி செய்த சீனத் தம்பதி! விமான நிலையத்தில் சி.ஐ.டியினரால் மடக்கிப் பிடிப்பு.

இலங்கையில் பாரிய பண மோசடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் சீனத் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
‘ஸ்போர்ட்ஸ் செயின்’ என்ற கணினி மென்பொருளை அறிமுகப்படுத்தி பிரமிட் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்து 1,500 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி செய்தனர் என்று கூறப்படும் சீன தம்பதியினரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்றிரவு மலேசியா செல்வதற்காகக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்த போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் உடனே கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுனாவெல முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
சந்தேகநபர்கள் 35 மற்றும் 25 வயதுடைய கொழும்பு – 5 பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்துவந்தவர்கள் என்று விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸாரும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.