5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது பாகிஸ்தான்.
முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் இன்று நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் கான்வே 14 ரன்னுக்கும், ஆலன் 12 ரன்னுக்கும் அவுட் ஆகினர். இதையடுத்து கேப்டன் வில்லியம்சன் மற்றும் பிலிப்ஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.
இந்த இணை அதிரடியாக ரன்களை குவிக்க ஆரம்பித்தது. இதில் பிலிப்ஸ் 29 ரன்னுக்கும், வில்லியம்சன் 59 ரன்னுக்கும், சாம்பன் 25 ரன்னுக்கும், நீஷம் 17 ரன்னுக்கும் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் நஷீம் ஷா, ஹாரிஸ் ராப் தலா 2 விக்கெட்டும், சதாப் கான், நவாஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டகாரகளாக கேப்டன் பாபர் ஆசம், விக்கெட் கீப்பர் ரிஸ்வான் ஆகியோர் களம் இறங்கினர். இதில் பாபர் ஆசம் 15 ரன்னுக்கு ஆட்டம் இழந்தார். இதையடுத்து ஷான் மசூத் ரிஸ்வானுடன் ஜோடி சேர்ந்தார். இதையடுத்து மசூத் 19 ரன்னுகும், ரிஸ்வான் 34 ரன்னுக்கும் ஆட்டம் இழந்தனர். இதையடுத்து 4 விக்கெட்டுக்கு முகமது நவாஸ் மற்றும் ஹைதர் அலி ஆகியோர் களம் இறங்கினர்.
இந்த இணை அதிரடியாக ஆடி 26 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்த நிலையில் ஹைதர் அலி 31 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இதையடுத்து ஆசிப் அலி களம் புகுந்தார். இறுதியில் அந்த அணியின் வெற்றிக்கு 2 ஓவர்களில் 11 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரை சவுதி வீசினார். அந்த ஓவரில் 7 ரன்கள் வந்தது. இதையடுத்து இறுதி ஓவரில் அணியின் வெற்றிக்கு 4 ரன்களே தேவைப்பட்டது. இறுதியில் அந்த அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.