சோஷியல் மீடியா போஸ்ட்களுக்கு கட்டுப்பாடு இல்லையா? – சமூகவலைதள நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி
சமூகவலைதளங்களில் பதிவேற்றப்படும் அனைத்து வீடியோக்களையும் கண்காணிப்பது இயலாத காரியம் என்று பேஸ்புக், டிவிட்டர் மற்றும் யூடியூப் நிறுவனங்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.
யூடியூப் சேனலில் நீதித்துறை குறித்து அவதூறாக பேட்டி கொடுத்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மேலும் சமூகவலைதளங்களில் பதிவேற்றப்படும் சட்டத்திற்கு புறம்பான வீடியோக்களை நீக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் G.R.சுவாமிநாதன், B.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, யூடியூப். டிவிட்டர், பேஸ்புக் நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சமூகவலைதளங்களில் பதிவிடப்படும் அனைத்து பதிவுகளையும் கண்காணிக்க முடியாது என்று வாதிட்டனர்.
சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடுவதற்கு முன் தணிக்கை செய்யும் முறைக்கு வாய்ப்பு இல்லை. ஆனால், 2 முறை சமூக ஊடகங்களில் அவதூறு மற்றும் தவறான தகவல்கள் வெளியானால் அதை 36 மணி நேரத்தில் நீக்கலாம். அதற்கு வீடியோவை நீக்க வேண்டும் என்றால், URL முகவரியை கொடுக்க வேண்டும். மத்திய அரசின் தொடர்புடைய துறை சார்பில் குறிப்பிட்ட வீடியோவை நீக்க வேண்டும் என அதன் URL முவரியை கொடுத்தால், அந்த வீடியோ நீக்கப்படும்.அதேபோல் நீதிமன்றங்களின் உத்தரவின் அடிப்படையில், குறிப்பிட்ட வீடியோக்கள் நீக்கப்படும். தடைசெய்யப்பட்ட பிறகும் வேறு முகவரியில் வந்து பதிவிடுவதாகவும் முறையிட்டனர்.
இதைதொடர்ந்து மாநில அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், சமூக வலைதளங்கள் மத்திய அரசிடம் அனுமதி பெற்று லைசென்ஸ் பெற்று நடத்துகின்றனர். ஆனால் அவர்களுக்கு பொறுப்பு இல்லை என்பதை ஏற்க இயலாது என வாதிட்டார். இதையடுத்து, சமூகவலைதளங்களில் பதிவிடுவோரின் உண்மையான அடையாளத்தை காண என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என சரமாரியாக கேள்வியெழுப்பிய நீதிபதிகள், வழக்கை தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.