நீட் தேர்வுக்கு எதிரான ரிட் மனு: விசாரணை 12 வாரங்களுக்கு ஒத்திவைப்பு
நீட் தேர்வு கட்டாயம் என்ற சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையை 12 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற சட்டத் திருத்தத்துக்கு எதிராக தமிழக அரசு கடந்த 2020ல் தாக்கல் செய்த ரிட் மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, சி.டி.ரவிக்குமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழகத்தில் நீட் விலக்கு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு தற்போது குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் வழக்கை 12 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.
முன்னதாக, நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு நீட் தேர்வு குறித்து ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் அது தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை பாதிப்பதாகக் கூறி தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.