‘சத்யாவை கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்ய முற்பட்டேன்…’ – போலீஸில் சதீஷ் வாக்குமூலம்
சத்யாவை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்ய முற்பட்டதாகவும், அதற்குள்ளாக பொதுமக்கள் தன்னை பிடிக்க வந்துவிட்டனர் என்றும் சதீஷ் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
சென்னை கிண்டியை அடுத்துள்ள ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சத்யா (20). தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் சத்யாவுக்கு அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற இளைஞர் காதல் தொல்லை கொடுத்துவந்ததாக கூறப்படுகிறது.
சதீஷூம் அதே கல்லூரியில் படித்து வந்த நிலையில், நேற்று சத்யாவிடம் பேசுவதற்காக அவரை பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் சந்தித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் திடீரென சத்யாவை அந்த வழியாக வந்த மின்சார ரயிலில் தள்ளியுள்ளார்.
இதில் மின்சார ரயிலில் மோதி பலத்த காயமடைந்த சத்யா தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து பயந்துபோன சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சத்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட மாணவி சத்யாவின் தந்தை மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் சதீஷ் கைது செய்யப்பட்டார். லீஸ் விசாரணையின்போது சதீஷ் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது, சத்யாவை கொலைசெய்துவிட்டு நானும் தற்கொலை செய்துகொள்ள முற்பட்டேன். அதற்குள் என்னை பிடிக்க பொதுமக்கள் வந்துவிட்டனர். பிடித்தால் என்னை அடிப்பார்கள் என அங்கிருந்து ஓடிவிட்டேன்.
அதனால் குப்பை வண்டியில் அடிப்பட்டு சாவதற்காக துரைப்பாக்கம் சென்றேன். அங்கிருந்து எனது நண்பருக்கு குப்பை வண்டியில் விழுந்து சாவப்போவதாக மெசேஜ் அனுப்பினேன்’என சதீஷ் வாக்குமூலமாக கூறியுள்ளார்.
மேலும், போலீசாரிடம் என்னை அடிக்காதீங்க, என்னால் வலி தாங்க முடியாது என கதறியுள்ளார். மேலும் ஸ்ட்ரெஸ்ஸில் ரயிலில் தள்ளி விட்டதாகவும் வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.
மொபைலிலிருந்து அவர் நண்பருக்கு மெசேஜ் செய்த போது சிக்னலை ஆய்வு செய்து துரைபாக்கம் – கண்ணகி நகர் சாலையில் செல்லும் போது கைது செய்துள்ளனர். சதீஷுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.