இந்தியாவுடன் இணைந்தே திருகோணமலை அபிவிருத்தித் திட்டம்! – ரணில் திட்டவட்ட அறிவிப்பு.

திருகோணமலை மாவட்ட மூலோபாய அபிவிருத்தித் திட்டமானது தேர்தலை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படவில்லை என்றும், இது அடுத்த சந்ததியினருக்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தில் சில அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு இந்தியாவுடன் இணைந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இதில் துறைமுக அபிவிருத்தி மற்றும் எண்ணெய் தாங்கி மேம்பாடு ஆகியவை உள்ளடங்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் திருகோணமலை ஒர்ஸ் ஹில்லில் இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கு எண்ணெய் தாங்கிகளை வழங்க முற்பட்டபோது முன்வைக்கப்பட்ட எதிர்ப்புகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அன்று எண்ணெய் தாங்கிகளை வழங்கியிருந்தால், இன்று நாடு எரிபொருள் நெருக்கடியை எதிர்நோக்கியிருக்காது என்றும் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடல் ஆரம்பிப்பதற்கு முன்னர், திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள பல இடங்களையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒர்ஸ் ஹில்லில் இருந்தபடி அவதானித்தார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடலின்போது ஜனாதிபதி மேலும் கருத்துத் தெரிவித்ததாவது:-

“திருகோணமலையில் விமான நிலையம் இருந்தாலும் அங்கே பெரிய விமானங்களை தரையிறக்க முடியாது. எனவே, ஹிங்குரக்கொடை அல்லது வவுனியாவை சர்வதேச விமான நிலைய தலமாக உருவாக்குவதற்கான நிலைமை ஏற்படும். திருகோணமலை முதல் மட்டக்களப்பு வரையிலான சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது.

கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்காக நாம் முழுமையான திட்டத்தை உருவாக்க வேண்டும். அதேபோன்று வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டமும் உள்ளது.

வடக்குக்கும் கிழக்குக்கும் இடையில் திருகோணமலை அமைந்துள்ளது. அதேபோன்று வடமத்திய மாகாணத்தை எடுத்துக்கொண்டால் அநுராதபுரம் மற்றும் பொலனறுவையின் பெரும் பகுதி இப்பிரதேசத்துக்கே சொந்தமாகின்றது.

இந்த கூட்டு வேலைத்திட்டத்தை 5 வருடங்களில் செய்ய முடியாது. இதனை 20 – 25 வருடங்களில் செய்யலாம். மகாவலி அபிவிருத்தித் திட்டத்தை நிறைவேற்ற 10 வருடங்கள் தேவைப்பட்டன. எனவே, இதன் பணிகள் குறித்து கலந்தாலோசித்தப் பின்னர் அமைச்சரவையின் தீர்மானத்துடன் இந்தச் செயல் திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்தவுள்ளோம்” – என்றார்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், திருகோணமலை மாவட்ட செயலாளர், கிழக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர் மற்றும் அதிகாரிகள், இலங்கை துறைமுக அதிகாரசபை, முதலீட்டு ஊக்குவிப்புச் சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் அதிகாரிகள், திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டத்தை உருவாக்குவதில் ஆலோசனைப் பங்களிப்பை வழங்கிய நிறுவனத்தின் பிரதான திட்டமிடல் நிறைவேற்று அதிகாரி, கிழக்கு மாகாணத்தில் சேவையாற்றும் முப்படை மற்றும் பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் என்போரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.