உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்த அனைத்து விளை நிலங்களிலும் பயிரிட வேண்டும்! – ஜனாதிபதி ரணில் வலியுறுத்து.
நாட்டில் உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கு அனைத்து விளை நிலங்களிலும் பயிர்ச் செய்கையை முன்னெடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
திருகோணமலை மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
பாரம்பரியமாக விவசாயம் செய்யப்பட்டு வந்த அநேகமான விளை நிலங்கள் போரினால் கைவிடப்பட்டு, பின்னர் வனஜீவராசிகள் மற்றும் வனவள பிரதேசமாக எல்லையிடப்பட்டுள்ளன. அவ்வாறான பாரம்பரிய காணிகளை மீள விவசாயிகளுக்கு வழங்குவது தொடர்பிலும் இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
விவசாயிகளின் பிரச்சினைகளை விரைவாக தீர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, எதிர்வரும் போகத்தை சிறந்த முறையில் முன்னெடுப்பதன் மூலம் 2023 இல் ஏற்படக்கூடிய உணவு நெருக்கடியைச் சமாளிக்கத் தயாராக வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான வேலைத்திட்டம் திருகோணமலை மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள விதம் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் திருகோணமலை மாவட்ட செயலாளர், மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படைகளின் பிரதானிகள் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.