மட்டக்களப்பில் காணாமல்போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்! – விசாரணை இடைநிறுத்தம்.
காணாமல்போனோர் அலுவலகத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள், மட்டக்களப்பு காணாமல்போனோரின் உறவினர்களிடம் விசாரணைகள் முன்னெடுத்து அவர்களுக்கான இழப்பீடுகளை வழங்கும் பணியை ஆரம்பித்துள்ளது.
இதற்கமைய இன்று மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் விசாரணையை நிறுத்தும் முகமாகவும், எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பெரும் எதிர்ப்புப் பேரணியும் பிரதேச செயலக முற்றுகைப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் அம்பாறை மாவட்டத் தலைவியும், கிழக்கு மாகாண இணைப்பாளருமான தம்பிராசா செல்வராணி தலைமையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு தேர்தல் அலுவலகத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதான வாயில் வரை சென்று அங்கு முற்றுகைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, “காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்களை ஏமாற்றும் ஜனாதிபதி செயலகத்தின் விசாரணை வேண்டாம்”, “எங்கள் உறவுகளின் உயிருக்கு இரண்டு இலட்சம் ரூபா இலஞ்சமா?”, “ஆணைக்குழு விசாரணையை உடன் நிறுத்து”, “ஓ.எம்.பி. வேண்டாம்”, “சர்வதேசத்தை ஏமாற்றும் அரசின் செயற்பாடுகளை உடன் நிறுத்து”, “பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டு கிடக்கும் அரசு எவ்வாறு இரண்டு இலட்சத்தை வழங்கப் போகின்றது” போன்ற கோஷங்களை உறவுகள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்தப் போராட்டத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவாட்ட பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உள்வாயில் மூடப்பட்டிருந்த நிலையில் பிரதான வாயிலை மூடி விசாரணை மேற்கொள்வதைத் தடுக்கும் விதமாக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து மட்டக்களப்பு பிரதான பொலிஸ் நிலையப் பொலிஸார் குறிப்பிட்ட இடம் வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை ஓரப்படுத்த முற்பட்ட வேளை அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் பொலிஸார் விசாரணை நடத்தப்படும் மண்டபத்தினுள் சென்று விசாரணை அதிகாரிகள் சிலரை அழைத்து வந்து போராட்டம் மேற்கொள்வோருடன் கலந்துரையாடியபோது மேற்கூறப்பட்ட விசாரணையில் நம்பிக்கை இல்லை, அப்பாவித் தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டாம், இந்த விசாரணையை உடன் நிறுத்த வேண்டும் என்ற பலமான கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்தனர்.
அதைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் மேற்படி விசாரணைக் குழுவினருடன் கலந்துரையாடியதையடுத்து மேற்கொள்ளப்படும் விசாரணையை உடன் நிறுத்துவதற்குத் தீர்மானித்து காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள் விசாரணையை இடைநிறுத்து அங்கிருந்து சென்றனர்.
அதன் பின்னர் போராட்டக்காரர்களும் இவ்வாறான விசாரணை என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் செயற்பாட்டை எந்த மாவட்டத்திலும் நடத்த இடமளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்து போராட்டத்தை நிறுத்தி கலைந்து சென்றனர்.