பேய் ஓட்டுவதாக மகளை நரபலி கொடுத்த தந்தை… கேரளாவை தொடர்ந்து குஜராத்தில் கொடூரம்…
குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்தை சேர்ந்தவர் பவேஷ் அக்பரி. இவருக்கு 14 வயதில் தாரியா என்ற மகள் உள்ளார். தாரியா சூரத்தில் தங்கி 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், தந்தை பவேஷ் தனது மகளின் படிப்பை திடீரென நிறுத்தி, சொந்த ஊருக்கு அழைத்து வந்து அங்குள்ள பண்ணை வீட்டில் தங்க வைத்துள்ளார்.
தந்தை பவேஷ் சில நாள்களாக பெரும் பண நெருக்கடியில் இருந்து வந்த நிலையில், இவருக்கு தாந்திரக மந்திர வேலைகளில் ஈடுபாடு இருந்துள்ளது.இவரின் மூத்த சகோதரர் தீலிப் கடன் மற்றும் வீட்டு பிரச்னைகளை தீர்க்க பவேஷுக்கு விபரீத யோசனை சொல்லியுள்ளார். இவர்கள் வீட்டில் இருக்கும் ஒரு பெண் குழந்தை பவேஷின் மகள் தாரியா தான். அவருக்கு பேய் பிடித்துள்ளதால் தான் குடும்பத்தில் இது போன்ற பிரச்சனை உள்ளது.
எனவே, தாரியாவுக்கு தந்திரீக பூஜை செய்தால் பிரச்னை தீர்ந்துவிடும் என்ற விபரீத முடிவை எடுத்து படிப்பை நிறுத்தி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை ஆறு நாட்கள் விதவிதமான முறையில் பூஜை சடங்கு என்ற பெயரில் சிறுமிக்கு கொடுமைகள் செய்துள்ளனர். பழைய கந்தல் துணிகளை கொடுத்து அதை போட சொல்லி இரண்டு மணிநேரம் நெருப்பின் முன் நிற்க வைத்து வாட்டியுள்ளனர். பின்னர் கம்புகளை வைத்து அடித்து பேய் ஓட்டுவதாக தாக்கியுள்ளனர். பின்னர் அருகே உள்ள கரும்பு காட்டிற்குள் அழைத்துச் சென்று நாற்காலி ஒன்றில் கட்டிபோட்டு மூன்று நாள்கள் உணவு தராமல் பட்டினி போட்டுள்ளனர்.
சத்தம் வரக்கூடாது என வாய் மற்றும் கண்களையும் சேர்த்து இவர்கள் கட்டியுள்ளனர். இவ்வாறு மூன்று நாள்கள் சென்ற நிலையில், பட்டினி கிடந்தே அக்டோபர் 7ஆம் தேதி அன்று சிறுமி தாரியா பரிதாபமாக இறந்துள்ளார். இதை அறிந்ததும், உடலை எடுத்து அதிகாலை வேளையில் யாருக்கும் தெரியாமல் தந்தை பவேஷ், பெரியப்பா தீலீப் எரித்துள்ளனர்.
இத்தனை சம்பவங்கள் நடந்த பின்னர் தான் சூரத்தில் வசிக்கும் சிறுமியின் தாய் வீட்டாருக்கு மகள் உயிரிழந்த கதையை பவேஷ் சொல்லியுள்ளார்.தாய் வழி தாத்தா வால்ஜீபாய் என்பவருக்கு மரணம் தொடர்பாக சந்தேகம் வர, இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சிசிடிவிக்களை வைத்து விசாரணை மேற்கொண்டதில் இந்த உறைய வைக்கும் அதிர்ச்சி சம்பவங்கள் அம்பலமாகியுள்ளது. தற்போது கேரளாவில் நிகழ்ந்த நரபலி சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பி ஓய்வதற்கு முன்னரே மற்றொரு நரபலி கொலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.