டி20 உலக கோப்பைக்கு முன்னதாக ஒரே மேடையில் 16 அணிகளின் கேப்டன்கள்.
ஆஸ்திரேலியாவில் நாளை முதல் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.
இதில் முதல் சுற்றில் 8 அணிகள் விளையாடும். அவற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர்12 சுற்றுக்கு தகுதி பெறும். இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட உள்ளன.
நாளை கீலாங் ஸ்டேடியத்தில் நடக்கும் முதல் சுற்று ஆட்டங்களில் முன்னாள் சாம்பியன் இலங்கை- நமிபியா மற்றும் நெதர்லாந்து-ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதுகின்றன. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் வருகிற 23-ந்தேதி மெல்போர்னில் மோதுகின்றன.
இப்போட்டியில் பங்கேற்பதற்காக 16 அணிகளும் ஆஸ்திரேலியாவில் முகாமிட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. போட்டிக்கு முன்னதாக இன்று ஐசிசி சார்பில் கேப்டன் தினம் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அனைத்து அணிகளின் கேப்டன்களும் பங்கேற்றனர்.
உலகக் கோப்பைக்கான தயாரிப்பு மற்றும் பயிற்சிகள் குறித்து அந்தந்த அணியின் கேப்டன் செய்தியாளர்களிடம் பேசினர். அவர்கள் ஒரே மேடையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.