மீன் வியாபாரி வீட்டையே ஒரே நாளில் காப்பாற்றிய அதிர்ஷ்ட தேவதை!
அண்மை காலமாகவே கேரளா லாட்டரி பரிசு தொடர்பான செய்திகள் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு கவனம் பெறுகிறது. அம்மாநிலத்தில் அரசே லாட்டரி விற்று வரும் நிலையில், பல சாமானியர்கள் இந்த லாட்டரி மூலம் பயன் அடைந்து அவர்கள் வாழ்வே சிறந்த மாற்றத்தை கண்டுள்ளது. அப்படி தான் கடந்த மாதம் கேரளாவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனூப் ரூ.25 கோடி பரிசு தொகை வென்ற அதிர்ஷ்டத்தை கண்டார்.
அந்த வகையில் கேரளா மீன் வியாபாரி ஒருவருக்கு தேவையான நேரத்தில் அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டி வீட்டையே காப்பாற்றியுள்ளது.
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள மைநாகப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பூக்குஞ்சு. இவர் தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் மீன் விற்று வாழ்ந்து வருகிறார். இவரது வாழ்வில் மறக்க முடியாத நாளாக கடந்த 12ஆம் தேதி மாறியுள்ளது. மிக எளிய மனிதரான தனக்கு ஒரு சொந்த வீடு வேண்டும் என்ற ஆசையில் அங்குள்ள கார்ப்பரேஷன் வங்கியில் ரூ.9 லட்சம் கடன் பெற்று வீடு ஒன்றை கட்டியுள்ளார். இந்த வங்கி கடன் தற்போது ரூ.12 லட்சமாக வட்டியுடன் உயர்ந்து நிற்கும் நிலையில், தற்போது பெரும் பண நெருக்கடியில் இருந்துள்ளார் பூக்குஞ்சு.
இவரால் வட்டி மற்றும் கடனை திரும்ப செலுத்த முடியாததால் கடந்த 12ஆம் தேதி அன்று மதியம் 12 மணி அளவில் வீட்டை ஜப்தி செய்யப்போவதாக வங்கி நோட்டீஸ் அனுப்பியது. கவலை தோய்ந்த நிலையில் இருந்த பூக்குஞ்சுவுக்கு அடுத்த 3 மணி நேரத்தில் அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டி தான் ஆசையாக கட்டிய வீட்டியே காத்து தந்துள்ளது. இவர் சில நாள்களுக்கு முன்னர் வாங்கிய லாட்டரியில் பரிசு தொகையாக ரூ.70 லட்சம் விழுந்து பூக்குஞ்சு வெற்றிபெற்றுள்ளார். அக்டோபர் 12ஆம் தேதி மத்தியம் 3 மணி அளவில் முடிவுகள் வெளியாகி கவலையில் இருந்த பூக்குஞ்சுவுக்கு எதிர்பாராத மகிழ்ச்சியை தந்துள்ளது.
தற்போது தன்னுடைய கடனான ரூ.12 லட்சத்தை அடைத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை வைத்து குழந்தைகளுக்கு நல்ல கல்வியும், குடும்பத்தின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் பூக்குஞ்சு திட்டமிட்டுள்ளார்.