சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடன் நிவாரணம் வழங்குக!

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஒத்துழைப்புடன் துரிதமாக ஒருங்கிணைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்குத் தேவையான நிதி, நிதி அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் துரிதமாக வழங்குமாறும், பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதார வசதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அனைத்து பிரதேச செயலாளர்களும் அமைச்சுக்களும் ஒருங்கிணைந்து செயற்படுமாறும், நிவாரணம் வழங்கும் பணிகளில் அரச அதிகாரிகள் மற்றும் முப்படையினரின் ஒத்துழைப்பைப் பெறுமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பலத்த காற்று, மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் திருகோணமலை, அம்பாந்தோட்டை, காலி, கிளிநொச்சி, களுத்துறை, கம்பஹா, கொழும்பு, புத்தளம், இரத்தினபுரி, கண்டி மற்றும் கேகாலை ஆகிய 11 மாவட்டங்களைச் சேர்ந்த 52 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 15 ஆயிரத்து 404 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலவும் மோசமான காலநிலை காரணமாக நாடு முழுவதும் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காணாமல்போயுள்ளனர். அதேவேளை, 5 வீடுகள் முழுமையாகவும், 193 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட 439 குடும்பங்களைச் சேர்ந்த 1,927 பேர் நாடளாவிய ரீதியில் 21 பாதுகாப்பான நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.