டி20 உலக கோப்பை கிரிக்கெட்- முதல் ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்திய நமீபியா.
8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியது. முதல் சுற்றின் முதலாவது ஆட்டத்தில் இலங்கை, நமிபியா அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து களம் இறங்கி விளையாடிய நமீபியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் பிரைலின்க் 28 பந்துகளில் 44 ரன்னும், ஜே.ஜே.ஸ்மித் அவுட் ஆகாமல் 16 பந்துகளில் 31 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணி, நமீபிய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் தொடக்க வீரர் நிசங்கா 9 ரன்னுக்கும், மெண்டீஸ் 6 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். தனன்யா டிசெல்வா 12 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். குணதிலகா டக்அவுட்டானார். அதிகபட்சமாக கேப்டன் தசுன் ஷனகா 29 ரன்னும், பானுகா ராஜபக்சே 20 ரன்னும் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னுடன் பெவிலியன் திரும்பினர்.
இலங்கை அணி 19 ஓவர் முடிவில் 108 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 55 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியா அபார வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் டேவிட் வைஸ், பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ்,பென் ஷிகோங்கோ,ஜான் ப்ரைலின்க் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஸ்மித் ஒரு விக்கெட் எடுத்தார்.