தவறைத் திருத்திக்கொள்ளாமல் முடங்கிக் கிடப்பதே வெட்கக்கேடு!
“இலங்கையில் அமைதி நிலவுவதை சிலர் விரும்பவில்லை. இலங்கையர்கள் சுயமாக எழுவதையும் அவர்கள் சகித்துக்கொள்வதில்லை. கையேந்தும் நிலையையே விரும்புகின்றனர். இந்த நிலைமை மாற வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து பொது வேலைத்திட்டத்தின் கீழ் பயணிக்க வேண்டும்.”
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாவலப்பிட்டி தொகுதிக் கூட்டம் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“எமது கட்சியை வெற்றிபெற வைப்பதற்கு மஹிந்தானந்த அளுத்கமகேயும், நாவலப்பிட்டி தொகுதி மக்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். இன்றும் மஹிந்தானந்த தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கின்றார். மக்களும் அவர் பின்னால் நிற்கின்றனர். அந்தச் சக்திதான் எமது கட்சியின் பலமாகும்.
நாம் ஒரு நாடாக பல சவால்களை சந்தித்துள்ளோம். கொவிட் பிரச்சினையை எதிர்கொண்டு மீண்டெழ முயற்சிக்கும்போது பொருளாதாரச் சவால் ஏற்பட்டது. அதனை எதிர்கொள்கையில் பிரச்சினைகளும் ஏற்பட்டன. மன்னர் காலத்தில் இருந்தே ஆக்கிரமிப்பு போன்ற சவால்களை, ஒன்றாக இருந்து – எழுந்து எதிர்கொண்ட வரலாறு எமக்கு உள்ளது. இது தெரிந்தும், தெரியாதவர்கள் போல் சிலர் செயற்படுகின்றனர்.
சவால்களை ஏற்பதற்கு தைரியமின்றி, விமர்சனங்களை மட்டும் முன்வைத்துக் கொண்டு, சுமைகளை எம் மீது திணிக்கின்றனர். தவறுக்கு நாம் மட்டுமே பொறுப்பு என எம்மைப் பந்தாடியும் வருகின்றனர். மறுபுறத்தில் சேறுபூசும் நடவடிக்கையும் இடம்பெறுகின்றது.
தாங்கள் நல்லவர்கள் எனக் காட்டிக்கொள்ள முற்படுபவர்களும் தவறுகளை இழைத்துள்ளனர். தவறு இடம்பெறுவது இயல்பு. அதனை ஏற்க வெட்கப்பட வேண்டியதில்லை. தவறைத் திருத்திக்கொள்ள முற்படாமல் முடங்கி இருப்பதுதான் வெட்கம்.
பொதுவேலைத்திட்டத்துக்கு அழைப்பு விடுத்தாலும் வருவதில்லை. ஆட்சிகள் மாறும்போது அரச கொள்கைகளும் மாறுவது சிக்கலுக்குரிய விடயமாகும். எனவே, பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றாக இணைந்து பயணிக்க முன்வரவேண்டும்” – என்றார்.