நாடாளுமன்றில் பொன்சேகா முட்டாள்தனமாக செயற்படுகிறார் – சுரேஷ்
பாராளுமன்றில் உறுப்பினராக இருந்து கொண்டு இராணுவ வீரர் போல் நடப்பது பொன்சேகாவின் முட்டாள் தனம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மாஸ்டர் சரத் பொன்சேகாவின் நாடாளுமன்றில் உரையாற்றும் போது சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்ட சிலர் எதிர்கொண்டவற்றை த.ம.தே.கூ தலைவர் க.வி விக்னேஸ்வரனும் எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்திருந்தார். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற குற்றங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் உள்ள ஒருவர் மிரட்டல் பாணியில் பாராளுமன்ற உறுப்பினரை பேசுவது என்பது ஏற்புடையதல்ல.
ஒரு இனத்தினுடைய பிரதிநிதிகள் தமது இனத்தினுடைய முக்கியத்துவம் பற்றியும், இனத்தினுடைய பிரச்சினைகள் தொடர்பிலும் பேசுவதை பிழையாக பார்ப்பதென்பது அவர்களுடைய பிழையே ஆகும். பாராளுமன்றில் உறுப்பினராக இருந்து கொண்டு இராணுவ வீரர் போல் நடப்பது பொன்சேகாவின் முட்டாள் தனம். அவருடைய வாசகங்கள் நிச்சயமாக கண்டிக்கப்பட வேண்டியது.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பாராளுமன்றத்திற்குள்ளேயே வைத்து மிரட்டல் தொனியில் பேசுவது அநாகரீகமான செயலாகும். பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான விடயங்கள் இடம்பெறுமாக இருந்தால் சபாநாயகர் அதற்குப் பதில் சொல்ல வேண்டும்.
பாராளுமன்றில் சி.வி. விக்னேஸ்வரனுடைய உயிர் பாதுகாப்பிற்கு சபாநாயகர் உத்தரவாதம் கொடுப்பது பற்றியும், அவரது சிறப்புரிமை தொடர்பிலும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உறுப்பினர்கள் எதிர்வரும் நாட்களில் விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடவுள்ளோம், என்றார்.