யாழில் உயிர்கொல்லி ஐஸ் போதைப்பொருள் வியாபாரிகள் வசமாகச் சிக்கினர்!
உயிர்கொல்லி ஐஸ் போதைப்பொருளை மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வந்து விற்பனை செய்து வந்த பிரதான வியாபாரி ஒருவர் உட்பட மூன்று பேரை பொம்மைவெளிப் பகுதியில் வைத்துக் கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
34, 26 மற்றும் 42 வயதுடைய சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 2 கிராம் 350 மில்லிகிராம் உயிர்கொல்லி ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினர் சந்தேநபர்களை நேற்று மாலை கைது செய்துள்ளனர்.
உயிர்கொல்லி ஐஸ் போதைப்பொருள் வாங்க வருபவர்களிடம் பணம் இல்லாதவிடத்து அவர்களுடைய தொலைபேசிகளை வாங்கிவிட்டு அதற்குப் பதிலாக உயிர்கொல்லி ஐஸ் போதைப்பொருளை பிரதான சந்தேகநபர் விற்றுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தன்னுடைய மோட்டார் சைக்கிளைக் கொடுத்து அதன் பெறுமதிக்குரிய உயிர்கொல்லி ஐஸ் போதைப்பொருளை பெற்றுச் சென்றுள்ளார். அந்த மாணவன் போதை வழக்கொன்றில் சிக்கியிருப்பதால் பல்கலைக்கழகத்தில் இருந்து தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபர்களிடமிருந்து 7 தொலைபேசிகளும், ஒரு மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ். மாவட்டத்தில் உயிர்கொல்லி ஐஸ் போதைப்பொருள் பாவனையும் தற்போது அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.