குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அறுவை சிகிச்சை
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லி உள்ள ராணுவ மருத்துவமனையில் நேற்று காலை 11.30 மணி அளவில் அனுமதிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு இடது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து மருத்துவமனையில் இருந்து இரண்டு மணிநேரத்திலேயே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் குடியரசுத் தலைவர் சில நாள்கள் ஓய்வில் இருப்பார் எனக் கூறப்படுகிறது.
குடியரசுத் தலைவருக்கு இந்த அறுவை சிகிச்சையை பிரிகேடியர் எஸ்கே மிஸ்ரா தலைமையிலான மருத்துவ குழு மேற்கொண்டது. அறுவை சிகிச்சைக்கு முந்தைய நாள் அசாம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்ட குடியரசுத் தலைவர் முர்மு அங்குள்ள பிரசித்தி பெற்ற காமகேயா அம்மன் கோயிலில் தனது மகளுடன் வழிபாடு செய்தார். பின்னர் சனிக்கிழமை இரவே அவர் டெல்லி திரும்பிய நிலையில், நேற்று பகல் திட்டமிட்டபடி அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.