போராட்டக்காரர்களைச் சிறையில் அடைப்பதற்கு எதிராக டலஸ் அணி போர்க்கொடி!
“பொதுமக்கள் தமது துயரைத் தெரிவிக்க வழி இன்றி பாதைக்கு இறங்கும்போது அவர்களைப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைப்பதில் எந்த நியாயமும் இல்லை.”
இவ்வாறு டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை உறுப்பினரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தெரிவித்தார்.
பேராதனையில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் மேலும் தெரிவித்தாவது:-
“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசு மேற்கொண்ட பொருளாதாரக் கொலைக்கான தண்டனையைப் பொதுமக்களே இன்று அனுபவிக்கின்றனர். வரிக்கு மேல் வரி விதிக்கப்பட்டு வற் வரி மட்டும் 17.5 வீதம் வரை மறைமுகமாகச் செலுத்தப்படுகின்றது.
‘மொட்டு’ அரசு பதவிக்கு வந்தபோது ஒரு திறமைமிக்க ஜனாதிபதி செயலாளர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், 2008 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் தடை விதித்த ஒருவரையே ஜனாதிபதி செயலாளராக நியமித்தனர். அதன் விளைவுகளை இன்று வரை அப்பாவிப் பொதுமக்கள் அனுபவித்து வருகின்றனர்.
அதேபோல் ‘மொட்டு’ அரசு ஆட்சிக்கு வந்ததும் வரிச் சலுகை வழங்கியது. அதனால் அரசுக்குச் சேர வேண்டிய வரிப்பணமான 600 ட்ரிலியன் ரூபா கிடைக்காமல்போனது. இதுவும் மாபெறும் தவறாகும்.
நாட்டின் பொருளாதாரத்தைக் கொலை செய்தவர்கள் சிலர், தற்போதும் அரசினுள் இருந்து கொண்டே நாட்டை நிர்வகிக்கின்றனர்.
கொரோனாத் தொற்றின் போது வெளிநாட்டு அன்பளிப்பாகக் கிடைக்கப் பெற்ற 800 மில்லியன் யூ.எஸ். டொலர் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டது. அது சென்ற இடமும் தெரியவில்லை என்றே கூறவேண்டும்.
இவை போன்ற காரணங்கள்தான் இந்த நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் சென்ற காரணிகளாகும்.
வரி அறவிடுவதில் தவறில்லை. ஆனால், பொதுமக்கள் கழுத்தை நெறித்து, கசக்கிப் பிழிந்து வரி அறவிடுவதுதான் தவறாகும்.
மக்களுக்குச் சகாயம் வழங்க வேண்டி அரசு மக்களைச் சிரமத்துக்கு உள்ளாக்கி வரிச்சுமையை மேலும் மேலும் அதிகரித்துச் செல்வதை அனுமதிக்க முடியாது-
சாதாரணமாக ஒரு வைத்தியர் அல்லது காரியாலயத்தில் உள்ள பரிபாலன அதிகாரி மாதம் ஒரு இலட்சதுக்கு மேல் சம்பளம் எடுக்கலாம். அவரும் வருமான வரி செலுத்த வேண்டியுள்ளது.
இவ்வாறு வருமான வரி எல்லையைக் கண்மூடித்தனமான உயர்த்துவதால் உள்ளூர் உற்பத்தியாளர்கள் வரி செலுத்த முடியாது தமது உற்பத்திகளைக் கைவிடுவர்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தமது முதலீட்டைக் கைவிட்டு வெளியேறிவிடுவர். இதனால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு பலர் தொழிலை இழக்கலாம்.
காரியாலயப் பரிபாலன அதிகாரிகள் தமது தொழிலைக் கைவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்று விடலாம். இந்த ஆபத்துக்களில் இருந்து நாட்டை மீட்க வேண்டும்.
நாடாளுமன்றில் தற்போது எதிர்க்கட்சிக்கு 108 ஆசனங்கள் வரை இருக்கின்றன என்று கருதுகின்றோம். எனவே, காலப் போக்கில் நல்லதொரு ஆட்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரு குழுவை வெகுவிரைவில் ஏற்படுத்தி ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படலாம் என எதிர்பார்க்கின்றோம்” – என்றார்.