மீள்குடியேற்றம், காணிப் பிரச்சினை, காணாமல்போனோர் விவகாரம் விரைந்து தீர்வு காண அமைச்சரவை உப குழு.

வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விரைந்து தீர்ப்பதற்காகவும், நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காகவும் அமைச்சரவை உப குழுவொன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இந்தக் குழுவில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, அலி சப்ரி, விஜயதாஸ ராஜபக்ச ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கையில் வாழும் பல்லின மக்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காகவும், வடக்கு, கிழக்கில் போருக்குப் பின்னரான மீள்குடியேற்றம், காணி மற்றும் காணாமல்போனார் விவகாரம் தொடர்பில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதற்காகவுமே இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.