வீடியோவை காட்டி 70 லட்சம் கப்பம் பெற முயன்ற பெண் கைது
இந்தியாவில் வைத்து பேருவளை வர்த்தகர் ஒருவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும்போது , அதை இரகசியமாக கைத் தொலைபேசியில் பதிவுசெய்து, பின்னர் அந்த வர்த்தகரை பயமுறுத்தி 70 இலட்சம் ரூபா கப்பம் கேட்டு மிரட்டிய பெண் ஒருவரும் , அவருக்கு ஆதரவளித்த 45 வயதுடைய ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மாளிகாவத்தை ஜும்மா மஸ்டிஸ் வீதியில் வசிக்கும் 33 வயதுடைய பெண் ஒருவரும் 45 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பேருவளை, எகொடவத்தை பிரதேசத்தில் உள்ள 52 வயதான மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்கிடமான பெண், இந்தியாவில் வைத்து மாணிக்கக்கல் வர்த்தகருடன் அறிமுகமாகியுள்ளதோடு, அங்கு ஏற்பட்ட நட்பின் காரணமாக ஹோட்டல் அறையில் பலமுறை படுக்கையை பகர்ந்து கொண்டுள்ளார். அதனை அந்த பெண் இரகசியமாக தனது கைத்தொலைபேசியில் பதிவு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் உள்ள காட்சிகளை சிடிக்களில் பதிவு செய்து வர்த்தகரின் குடும்ப உறுப்பினர்களிடம் காட்டப் போவதாக மிரட்டி 70 இலட்சம் ரூபா கப்பம் கோரியதாகவும், இதற்கு முன்னரும் பேருவளையில் உள்ள வர்த்தகரிடம் 10 இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எஞ்சிய தொகையை பெற்றுக் கொள்வதற்காக காரில் களுத்துறை பிரதேசத்திற்கு வந்து கொண்டிருந்த போதே சந்தேக நபரும், அவருக்கு ஆதரவாக செயற்பட்ட நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்து சோதனையிட்ட போது, படுக்கை அறையில் உள்ள காட்சிகள் அடங்கிய 2 குறுந்தட்டுகள் மற்றும் ஸ்மார்ட் போன் ஆகியவற்றை , போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.