ஆட்சியாளர்களைக் கடுமையாகச் சாடும் ஸ்ரீநேசன்!

இனவாதம், ஊழல், மோசடிகளால் சீரழிக்கப்பட்ட இலங்கையின் இன்றைய அவலநிலைக்குத் தீர்வைக்காண முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் உள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்ப மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து,74 ஆண்டுகளாக 74 சதவீதமான சிங்ஙகள மக்களின் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு இனவாத அரசியல் செய்யப்பட்டு வருகின்றது. இதனால் தேசிய ஒற்றுமை,தேசத்தின் அபிவிருத்தி, தேசத்தின் இறையாண்மை, தேசத்தின் கௌரவம் யாவும் நலிவடைந்து பலவீனமடைந்துள்ளன.

இதனால் சீரழிக்கப்பட்ட இலங்கையின் அவல நிலைமைகள் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக வெளிப்பட்டுள்ளன.

இலங்கை அபிவிருத்தி அடைந்துவரும் நடுத்தர வருமானமுடைய நாடாக இருந்தது, அண்மையில் அமைச்சரவையால் இலங்கை வறுமைக்குரிய ஏழை நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

உலக நாடுகள், உலக நிறுவனங்களிடம் இருந்து முழுமையாகக் கையேந்துவதற்கு இந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசு தயாராகிவிட்டது. அதாவது உள்நாட்டில் இனவாத அரசியல் செய்த இந்த அரசு வெளிநாடுகளிடம் பிச்சைப்பாத்திரம் ஏந்துவதை கௌரவக்குறைவாக நினைக்க முடியவில்லை.

இந்த அரசால் வெளியேற்றப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவற்றுக்கு அழைப்புவிடும் நிலையை இரண்டரை ஆண்டுக்குள் உருவாக்கி விட்டது இந்த அரசு.

அரசின் ஏழ்மை நாட்டுப் பிரகடனத்திற்கு முன்பாக இலங்கையை உலக உணவு விவசாயத்தாபனம் பட்டினி வலய நாடுகளில் ஒன்றாக அறிவித்துள்ளது.

அதேவேளை, இலங்கையில் 63 இலட்சம் மக்களுக்கு உணவுப்பாதுகாப்பு இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. அதாவது 10 மனிதர்களில் 3 மனிதர்கள் உணவுப்பாதுகாப்பு இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் போசணைக் குறைபாடு 14 வீதமாக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

ஊட்டச்சத்து இன்மை, மந்த போசண்ணை மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் குழந்தைகள், சிறுவர்கள், கர்ப்பிணித்தாய்கள் மந்தபோசணையால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.

இலங்கை இருண்ட யுகத்தை நோக்கிச் செல்வதாக அரச வைத்தியர் சங்கம் எச்சரித்துள்ளது.

எமது நாட்டின் உணவுப் பணவீக்கம் 94 சதவீதமாக அதிகரித்துள்ளது. உலகளவில் இலங்கை பணவீக்கத்தில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. பணவீக்கத்தில் இலங்கை எத்தியோப்பியாவையும் முந்திவிட்டது.

அத்தியாவசிய உணவைப் போதியளவு கொள்வனவு செய்ய முடியாமல் மக்கள் வருவாயற்ற நிலையில் திண்டாடுகின்றார்கள். இதனால் வறிய குடும்பங்கள், மத்திய தரக் குடும்பங்கள் உண்ணும் உணவின் அளவைக் குறைத்துள்ளனர். ஊட்டச்சத்தான உணவுகள் எட்டாக்கனிகளாக மாறியுள்ளன.

தற்போதைய அரசு, அரசுக்குச் சேர வேண்டிய வரிகளைக் குறைப்புச் செய்தமையால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாக்களை இழந்துள்ளது.

அதேவேளை, விவசாயத்துக்கான இரசாயனப் பசளை இறக்குமதியை ‘மொட்டு’ அரசு நிறுத்தியதால் விவசாய விளைச்சல் 60 வீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் உள்நாட்டு விவசாய உற்பத்திகளின் விலைகள் இரண்டு, மூன்று மடங்குகளாக உயர்ந்துள்ளன.

இப்படியாக அரசு ஒரு பக்கம் வருவாய்களை இழக்க மக்களுக்கான மானியங்கள், உதவிகள், சேவைகள் பாரியளவில் குறைந்துள்ளன.

2020 களில் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்களைப் பெற்றிருந்தால் பொருட்களின் விலையேற்றங்களைக் கட்டுப்படுத்தி இருக்கலாம். ரூபாவின் பெறுமதியும் வீழ்ச்சியடையாமல் பேணியிருக்கலாம்.

இன்றைய விலையேற்றத்துடன் மக்கள் போட்டியிடுவதாக இருந்தால், அவர்களது வருமானம் மூன்று மடங்காக அதிகரிக்க வேண்டியுள்ளது. ரூபா 60,000 மாதாந்தம் வருமானம் பெற்ற உத்தியோகத்தர் ஒருவரின் வருமானம் 180,000 வரை அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால், உத்தியோகத்தர்களின் வருமானம் எதுவும் அதிகரிக்கப்படவில்லை.

தினக்கூலியாக பணியாற்றும் தொழிலாளியின் சம்பளம் ரூபா 2000 ஆக இருந்தால் அது ரூபா 6000 ஆக உயர்த்த வேண்டும். அதற்கான சாத்தியங்ஙகள் எதுவுமில்லை.

ஆனால், எதிர்மறையாக மக்களின் நேர் வரிகள், மறைமுக வரிகள் அதிகரித்தவண்ணம் உள்ளன.

மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதாகவே அரசின் செயற்பாடுகள் உள்ளன. ஒவ்வொரு குடிமகனும் 10 இலட்சம் ரூபாவுக்கான கடனாளியாக்கப்பட்டுள்ளான்.

எமது நாட்டின் வெளிநாட்டுக்கடன் தொகை 7 ஆயிரம் கோடி டொலர்களை (2,520,000 கோடி ரூபாய்கள்) தாண்டியுள்ளது. இலங்கையின் கடன் வட்டி மாத்திரம் 54 ஆயிரம் கோடி ரூபாய்களாக அதிகரித்துள்ளது.

நாட்டில் வருவாயற்று வாழமுடியாத நிலையில் மணித்தியாலத்திற்கு 32 என்ற அடிப்படையில் மக்கள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். இதுவரை 7 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்த அரச ஆட்சிக்காலத்தில் நாடு கடந்து சென்றுள்ளனர் என்றும், அதில் 1600 இற்கு மேற்பட்ட வைத்தியர்களும் அடங்குவர் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.

வறுமை காணமாக 30 வீதமான பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. அதேவேளை போதையூட்டும் கஞ்சா உற்பத்தியை அதிகரிக்க வேண்டும், இரவு விடுதிகள், மதுபான நிலையங்களுக்கான இராக்கால நேரத்தை நீடிக்க வேண்டும் என்றும் பெண் இராஜாங்க அமைச்சர் ஒருவர் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றார். அந்தவகையில், கலாசாரம் சீரழிந்தாலும் காசு பணத்தை அரசு திரட்ட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ஆலோசனை கூறுகின்றார்.

இலங்கையும் இந்து சமுத்திரப்பி ராந்தியமும் சக்தி வாய்ந்த நாடுகளின் பலப் பரீட்சைக் ககளமாக மாறியுள்ளது. சீனா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளின் அதிகாரப் போட்டிக்களமாக இலங்கை மாறியுள்ளது. அதிலும் குவாட் அமைப்பு நாடுகளும் சீனாவும் தமது செலவாக்கை இலங்கை மீது செலுத்த ஆரம்பித்துள்ளன. சீனா இலங்கைக்குப் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாக்களை வழங்கி கடன் பொறிக்குள் சிக்க வைத்துள்ளது.

இலங்கை உணவுக் கப்பலுக்காக பிற நாடுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்க, சீனாவின் உளவுக்கப்பல் இலங்கைக்கு வந்ததால் இந்தியா அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்துள்ளது.

உலக வல்லரசுகளில் ஒன்றான பிரித்தானியா 90 ஆயிரம் படைகளை மாத்திரம் கொண்டிருக்க, சிறிய ஏழ்மை நாடான இலங்கை 3 இலட்சத்து 31 ஆயிரம் படைகளைக் கொண்டுள்ளது. எனவே, படைகளுக்காக இலங்கை அதிகளவான பணத்தைச் செலவு செய்து கொண்டிருக்கின்றது.

யுத்தம் இல்லாத நாட்டில் பெருந்தொகையான படைகள் எதற்கு என்ற கேள்வி எழுகின்றது. யுத்தம் முடிந்தால் நாடு விரைவாக அபிவிருத்தியடையும் என்ற இலங்கை மக்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றமாக மாறியுள்ளது. யுத்த காலத்தில் இல்லாத பொருளாதார நெருக்கடி யுத்தத்தின் பின்னர் தோன்றியுள்ளது.

ஊழல், மோசடி, கையூட்டு, தரகுப் பணம், கறுப்புச்சந்தை உழைப்பு எனபவை அரசியலில் சகஜ நிகழ்வுகளாகிவிட்டன. போதைப்பொருள் வியாபாரம் கட்டுப்படுத்த முடியாத புற்றுநோயாக நாட்டையும், மக்களையும் பாதித்துள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் சிறைவாசம், யுத்தத்தால் விதவைகளாக்கப்படவர்கள், அநாதைகளாக்கப்பட்டவர்கள், அங்கவீனர்களாக்கப்பட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், சீரழிக்ககப்பட்ட பொருளாதார வாழ்வாதாரம் என்று பிரச்சினைகள் இடியப்பச் சிக்கலாகத் தொடர்கின்றன.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது போராட்டம் இரண்டாயிரம் நாட்களைக் கடந்து தொடர்கின்றன. அப்பிரச்சினையை ஓர் உயிருக்கு 2 இலட்சம் ரூபா என்ற ரீதியில் கொடுத்து சமாதி கட்டிவிட தற்போதைய அரசு நினைக்கின்றது. இதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையையும் ஆட்சியாளர்கள் ஏமாற்ற நினைக்கிறார்கள்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.