ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு நிரந்தர தடை.. சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்..!
தமிழகத்தில் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு மாற்றாக புதிய நிரந்தர சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் தமிழகத்தில் அதிக அளவில் தற்கொலை சம்பவங்கள் நடைபெறுவதை கருத்தில் கொண்டு இந்த வகை விளையாட்டுகளுக்கு நிரந்தரமாக தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.இச்சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளித்ததால் அக்டோபர் மூன்றாம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் அவசர சட்டத்திற்கு மாற்றாக நிரந்தர சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இதற்கான மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தார்.அதன்படி, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு மூன்று மாதங்கள் வரை சிறை தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
மேலும் இதுகுறித்த விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது மீறி விளம்பரங்களை வெளியிடும் நபர்களுக்கு அல்லது நிறுவனங்களுக்கு ஓராண்டு வரை சிறை தண்டனையும் 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் சூதாட்டத்தில் ஈடுபவர்களுக்கு பணம் அல்லது பொருட்கள் வழங்கும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை தண்டனை பெற்று மீண்டும் மீண்டும் அதே தவறில் ஈடுபடும் நபர்களுக்கு கூடுதல் அபராதமும் சிறை தண்டனை விதிக்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று சென்னை மாநகரில் புகை குழல் கூடங்கள் அதிக அளவில் திடீரென பெருகி உடல் நலத்திற்கு கொடிய சீர்கேட்டினை ஏற்படுத்தி வருவதாக புகார்கள் வந்துள்ளதால் இதே போன்று புகை குழல் கூடங்கள் தமிழகத்தில் செயல்பட தடை விதிப்பதற்கான சட்ட மசோதாவும் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இதற்கான மசோதாவை கொண்டு வந்தார். அதன்படி அரசின் சட்டத்தை மீறி இது போன்ற கூட்டங்களை நடத்துபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.