8 தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை! (பெயர் விபரங்கள் உள்ளே)

நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுகின்றனர்.
இவர்களை விடுதலை செய்கின்றமைக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவுக்கும் நாடாளுமன்றத்தில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் நன்றி தெரிவித்தார்.
ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படும் 8 பேரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் ஐந்து வருடம் முதல் 200 வருடங்கள் வரை தண்டனை வழங்கப்பட்டவர்கள் என்று சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. கூறினார்.
“இவர்களின் விடுதலை தொடர்பாகச் சிறைச்சாலை திணைக்களத்தினரிடம் நான் தொடர்பு கொண்டபோது குறித்த 8 பேரை விடுவிப்பதற்கான கடிதம் கிடைத்திருக்கின்றது எனவும், 8 பேரும் தீபாவளி தினத்தன்று விடுதலை செய்யப்படவுள்ளனர் எனவும் அவர்கள் அறிவித்தனர்” என்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. குறிப்பிட்டார்.
அத்துடன் விடுவிக்கப்படுவோரின் பெயர்களையும் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. வெளியிட்டார்.
அவர்களின் பெயர்கள் வருமாறு:-
01) வரதராஜன்
02) ரகுபதி சர்மா
03) இலங்கேஷ்வரன்
04) நவதீபன்
05) ராகுலன்
06) காந்தன்
07) சுதா
08) ஜெபநேசன்