மட்டக்களப்பில் காணிகள் வழங்கி தமிழ் ஊடகவியலாளர்களின் வாய்கள் அடைப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கர் வரையிலான அரச காணிகள் அதிகாரிகளால் மோசடியான வகையில் விற்கப்பட்டுள்ளன என்றும், இது தொடர்பான விடயங்கள் தமிழ் ஊடகங்களில் வெளிவராமைக்கு அங்குள்ள ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் 10 பேர்சர்ஸ் காணிகள் வழங்கப்பட்டு அவர்களின் வாய்கள் அடைக்கப்பட்டுள்ளமையே காரணம் என்றும் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நீதி அமைச்சின் 5 திருத்தச் சட்டங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்போது இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மேலும் கூறுகையில்,
“மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க காலத்தில் கொண்டுவரப்பட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழு ஊடாக 7 ஆயிரம் அல்லது 9 ஆயிரம் ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டன. அந்தக் காணிகளில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 16 ஆம் திகதி தென்பகுதி சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மட்டக்களப்பில் அதிகாரிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை கொள்ளையடித்த விற்றுள்ளனர் என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனை ஏன் தமிழ் ஊடகங்கள் வெளியிடவில்லை என்று தேடிப் பார்த்தபோது, அங்குள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளராக இருப்பவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் 10 பேர்சர்ஸ் காணிகளை வழங்கி அவர்களின் வாயை அடைத்துள்ளார். இதன் காரணத்தால் கொழும்பில் உள்ள தமிழ் தெரியாத ஊடகவியலாளர்களே மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரச்சினைகளை எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏறாவூர்பற்று அதாவது செங்கலடி பிரதேசத்தில்தான் அதிகளவில் காணிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. காணி பதிவில் சிக்கல் வந்தால் அந்தக் காணி தனியாருக்கு சொந்தமானதா? அரச காணியா? என்று ஆராயும் போது அதனைத் தனியார் காணி என்று எழுதுவதற்காகப் பல கோடி கணக்கான ரூபாய்களைக் கொள்ளையடித்துள்ளனர். 2 ஆயிரம் ஏக்கர் வரையிலான காணிகள் மோசடியான வகையில் துண்டு துண்டுகளாக விற்கப்பட்டுள்ளன.
இதில் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்களும் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை கொள்வனவு செய்துள்ளனர். அந்த மாவட்டத்தின் அரசியல் பிரமுகவராக நான் கவலையடைகின்றேன்.
தொழில் முயற்சியாளர்கள், ஏழைகளுக்கு சிறிய அரச காணியை எடுப்பதில் பல சிக்கல்கள் காணப்படுகின்றன. இவற்றையெல்லாம் ஊடகங்கள் கூறினாலும் நாடாளுமன்றத்தில் பேசினாலும் தீர்க்கப்படாது உள்ளது.
இலஞ்ச, ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். ஐ.நாவிலும் இந்த விடயம் கோடிட்டு காட்டப்படுகின்றன. இந்நிலையில், இந்த விடயம் தொடர்பில் அரசு விசாரணைகளை நடத்தி மோசடியான காணிகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்து மக்களுக்குப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” – என்றார்.