புலம்பெயர்ந்தோரின் நிதியைப் பெற ரணில் நாடகம்! – அரியநேத்திரன் குற்றச்சாட்டு.
“தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக 1946ஆம் ஆண்டு தொடக்கம் 2022ஆம் ஆண்டு வரையிலும் பல்வேறுபட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறுபட்ட ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டு பல்வேறுபட்ட சர்வதேச மற்றும் உள்ளூர் ரீதியான பேச்சுகளும் இடம்பெற்றன.
இந்தநிலையில், தமிழ் மக்களுக்கு என்ன கொடுக்கப்பட வேண்டும் என்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தெரிந்த விடயம். ஆனால், காலத்தை நீடித்து புலம்பெயர்ந்த மக்களின் நிதியைக் கொண்டு வருவதற்கான ஒரு நாடகமாகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் என்ற பெயரில் ரணில் தலைமையில் அமைச்சரவை உப குழு ஒன்று அமைக்கப்படுகின்றது.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் குற்றம் சாட்டினார்.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 22 ஆவது நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நினைவுத் தூபியில் நேற்று (19) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“மயில்வாகனம் நிமலராஜன் சர்வதேச மற்றும் உள்ளூர் ஊடகவியலாளராக இருந்து உண்மைகளை வெளிக்கொண்டு வந்ததன் காரணமாகப் படுகொலை செய்யப்பட்டார்.
1985ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஊடகவியலாள் க.தேவராஜா, அம்பாறை – கொண்டைவெட்டுவான் படை முகாமில் வைத்து முதலாவதாக வேட்டு வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் ஊடகவியலாளர்கள் 37 பேரும், சிங்கள ஊடகவியலாளர்கள் 8 பேரும், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் 2 பேருமாக 47 ஊடகவியலாளர்களை இந்த நாட்டில் தொடர்ச்சியாக மாறி மாறி ஆட்சி செய்த ஆட்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆட்சி செய்த ஜனாதிபதி யாராக இருந்தாலும் அதற்கான நீதி கிடைக்கவில்லை. அதனால் சர்வதேசத்தின் ஊடாக பல ஊடக அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள் ஜெனிவாவில் நீதி கேட்டும் அது கிடைக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயம்.
இப்போது புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க வந்துள்ளார். இவர் சாதாரண ஒரு வேட்பாளராக இருந்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் ஆணையைப் பெற முடியாது தோல்வியுற்று அதன் பின்னர் தேசியப்பட்டியில் உள்நுழைந்து இன்று மாபெரும் அதிஷ்டம் கிடைத்த ஜனாதிபதியாக இருக்கின்றார்.
உண்மையிலேயே அவரின் காலத்தில் கூட பல ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று அவருக்குத் தெரியும்.
பொருளாதாரம் இல்லாது நாடு வங்குரோத்து நிலையில் உள்ளது. இந்தநிலையில், பொருளாதாரத்தை மீட்டெடுக்க அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் ரணில்.
அதேவேளை, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக ரணில் தலைமையில் அமைச்சரவை உப குழு நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது வேடிக்கைக்குரியது” – என்றார்.