நிபந்தனைகளின் கீழ் 22 இற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு.

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவு வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று ஆரம்பமான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாம் ஆராய்ந்த விதத்தில் ஓப்பீட்டளவில் 20 ஆவது திருத்தத்தை விட 22இல் சில நல்ல விடயங்கள் உள்ளன. இதில் சில மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
எனவே, 22 ஆவது திருத்தம் தொடர்பில் மிகவும் நேர்மையாகச் செயற்படுவதாயின் இந்த த் திருத்தத்துக்கு நாம் சில நிபந்தனைகள் அடிப்படையில் ஆதரவளிக்கத் தயாராகவுள்ளோம்.
அரசமைப்பு பேரவைக்கான உறுப்பினர்கள் நியமனத்தின்போது, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவரின் இணத்துக்கமைய தெரிவு இடம்பெறவேண்டும்.
அத்துடன், இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பில் 22 ஆவது திருத்தச் சட்டமூல வரைவில் உள்ள சரத்தில் ஒரு துளியேணும் மாற்றம் ஏற்படக்கூடாது என்பதை நாம் வலியுறுத்துகின்றோம். இதில் சிலரின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப திருத்தங்களைக் கொண்டுவர முயற்சித்தால் நாம் அதனைக் கடுமையாக எதிர்ப்போம்.
இரண்டரை வருடங்களில் நாடாளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு என்று இந்தச் சட்டமூல வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் எந்த மாற்றமும் ஏற்படக்கூடாது. அது அவ்வாறே இருந்தால் நாம் ஆதரவு வழங்குவோம்.
அத்துடன், ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்ற ஒரு கோரிக்கையையும் நாம் முன்வைக்கின்றோம்.
இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் 22 ஆவது திருத்தத்தை நாம் ஆதரவளிக்கத் தயாராக உள்ளோம். எனவே, நாட்டை மேலும் வங்குரோத்து நிலைக்குத் தள்ள நாம் ஆதரவு வழங்கத் தயாரில்லை.
எக்காரணத்தைக் கொண்டும், இதில் மாற்றங்களை ஏற்படுத்த வர வேண்டாம். அந்தவகையில், மிகவும் நேர்மையாக, எதிர்க்கட்சி என்ற வகையில் ஐக்கிய மக்கள் சக்தி தமது ஆதரவை வழங்கும். எனினும், ஆளுங்கட்சிக்குள் இதற்குள் ஏதேனும் முரண்பாடுகள் ஏற்படுமா என்பதில் சந்தேகம் நிலவுகின்றது” – என்றார்.
இதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரையும் விடுவிக்குமாறும் எதிர்க்கட்சி தலைவர் அரசிடம் இன்று கோரிக்கை விடுத்தார்.
மட்டக்களப்பில் காணிகள் வழங்கி தமிழ் ஊடகவியலாளர்களின் வாய்கள் அடைப்பு!