பட்டாசுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்: சிவகாசியில் 1.5 லட்சம் பேர் வேலையிழப்பு

சிவகாசி: தில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பட்டாசுகள் வெடிக்கத் தடை மற்றும் பட்டாசுகள் வெடிக்க நேரக் கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகளால் தமிழகத்தின் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தொழிலில் 1.5 லட்சம் மக்கள் வேலையிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பேரிடர் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி விற்பனை களைகட்டினாலும், பட்டாசு விற்பனையில் நட்டமே நீடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

சுமார் 7 லட்சம் பேர் வேலைவாய்ப்பைப் பெற்றிருந்த பட்டாசுத் தொழிலில், தற்போது 1000க்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவர்களில் 6.5 லட்சம் தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துக்கான ஒரே வருவாயை இந்த பட்டாசு உற்பத்தி மூலமே ஈட்டிவந்தனர்.

பேரியத்துக்குத் தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளால் இந்த தொழிலில் 1.5 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டது.

பட்டாசு உற்பத்தியில் சரவெடிகள்தான் அதிக முக்கியத்துவம் பெறும். ஆனால் அதற்கும் தடை விதிக்கப்பட்டுவிட்டது. சரவெடி முழுக்க முழுக்க கைகளால் செய்யப்படுவது. இதற்கு தடை விதிக்கப்பட்டதால் ஏராளமானோர் வேலையிழந்ததாக தொழிலாளர்கள் கூறுகிறார்கள்.

விவசாயம் செய்ய வாய்ப்பில்லாத சிவகாசியில் பட்டாசு தொழில்தான் மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு கட்டுப்பாடுகளால் பட்டாசு தொழிற்சாலை பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகவும் தொழிலாளர்கள் கூறுகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.