பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் பதவி விலகினார்.
செப்டம்பர் மாதம் 5-ம் தேதி பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்ற கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் லிஸ் டிரஸ் தாம் பதவியேற்ற 45 நாள்களில் பதவி விலகியுள்ளார்.
இதுவரை எந்த பிரிட்டன் பிரதமரும் இவ்வளவு குறுகிய காலத்தில் பதவி விலகியதில்லை.
எனவே, இவரது பிரதமர் பதவிக் காலம்தான் வரலாற்றிலேயே மிகக் குறுகிய பிரிட்டன் பிரதமர் பதவிக் காலமாக இருக்கும்.
எண் 10, டௌனிங் சாலையில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு வெளியே தமது பதவி விலகல் குறித்துப் பேசிய லிஸ் டிரஸ், தாம் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அரசர் சார்லசிடம் கூறிவிட்டதாகவும் தெரிவித்தார்.
இது பிரிட்டன் அரசியலின் மிகப் பெரிய குழப்பமாகப் பார்க்கப்படுகிறது.
லிஸ் டிரஸ்சுக்கு அடுத்தது ஒரு பதவி ஏற்றால் இந்த ஆண்டின் மூன்றாவது பிரிட்டன் பிரதமராக அவர் இருப்பார்.
கன்சர்வேட்டிவ் கட்சியால் அடுத்து ஒரு பிரதமரை தேர்வு செய்ய இயலுமா? அதன் மூலம் அந்தக் கட்சியால் நாடு பொதுத் தேர்தலை சந்திக்காமல் தடுக்க முடியுமா? என்பது இப்போது கேள்வியாக உள்ளது.
இதனிடையே, கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆட்சியில் தொடர உரிமை இல்லை என்றும், உடனடியாக பொதுத் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்றும் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.
12 ஆண்டு கால கன்சர்வேட்டிவ் கட்சியின் தோல்விக்குப் பிறகு, இந்த சுழல் கதவு போன்ற குழப்ப நிலைக்குப் பதிலாக நல்ல ஆட்சியைப் பெறும் தகுதி பிரிட்டன் மக்களுக்கு உண்டு என்று அவர் கூறினார்.
போரிஸ் ஜான்சனுக்குப் பிறகு, யார் பிரதமர் என்ற போட்டியில் ரிஷி சுனக், லிஸ் டிரஸ் ஆகியோர் இருந்தனர். இந்தப் போட்டியில் போரிஸ் ஜான்சனைத் தோற்கடித்து லிஸ் டிரஸ் வெற்றி பெற்றார்.
கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி லிஸ் டிரஸ் கன்சர்வேட்டிவ் நாடாளுமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். இதையடுத்து பால்மோரல் கோட்டையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த ராணி இரண்டாம் எலிசபெத் இவரை பிரதமராக நியமித்தார். ஆனால், செப்டம்பர் 8-ம் தேதியே ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்தார்.
லிஸ் டிரஸ்ஸின் நிதியமைச்சரான க்வாசி க்வார்ட்டெங் செப்டம்பர் 23ம் தேதி ஒரு மினி பட்ஜெட்டை அறிவித்தார். இந்த பட்ஜெட்டில் 45 பில்லியன் பவுண்ட் அளவுக்கு வரிக் குறைப்பு அறிவிக்கப்பட்டது. இதனால், பங்குச் சந்தை தடுமாறியது. இந்த மினி பட்ஜெட் பிரிட்டனில் நம்பிக்கையை குலைத்த காரணத்தால், டாலருக்கு எதிராக பிரிட்டிஷ் பவுண்டு நாணயத்தின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது.
இதையடுத்து, வருமான வரியை குறைப்பதற்கு மேற்கொண்ட தமது முடிவை கைவிடுவது என பிரதமர் லிஸ் டிரஸ்ஸும், நிதியமைச்சர் க்வாசி க்வார்ட்டங்கும் முடிவு செய்தனர்.
அப்போதும் குழப்பம் தீராததால், அக்டோபர் 14ம் தேதி நிதியமைச்சர் பதவியில் இருந்து க்வார்ட்டெங்கை நீக்கிய லிஸ் டிரஸ், அவருக்குப் பதில் நிதியமைச்சர் பொறுப்புக்கு ஜெரமி ஹன்டை நியமித்தார். அவர் பெரும்பாலான வரிக் குறைப்பை திரும்பப் பெற்றார்.
ஆனாலும் கன்சர்வேட்டிவ் கட்சியில் குழப்பம் தீராததால், லிஸ் டிரஸ் அக்டோபர் 20-ம் தேதி பிரதமர் பதவியில் இருந்து விலகும் தமது முடிவை அறிவித்தார். இதன் மூலம் கடந்த கன்சர்வேட்டிவ் கட்சி நான்கு ஆண்டுகளில் நான்காவது ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கும் நிலை உருவாகியுள்ளது.