பஸிலுக்கு ஆப்புவைத்த ‘மொட்டு’ எம்.பிக்கள்! – 22 ஐ ஆதரிக்க அதிரடி முடிவு.
“நாட்டின் அடுத்தகட்ட நகர்வுக்கு முதல் படியாக அமையும் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்படும். அதற்கு நாம் ஆதரவு வழங்குவோம்” – என்று ஆளுங்கட்சியின் பிரதான பங்காளியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
22 ஆவது திருத்தச் சட்டமூலம் மீது நாடாளுமன்றத்தில் இன்று மாலை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இந்தநிலையில், தமது ஆதரவை ‘மொட்டு’க் கட்சி உறுப்பினர்களான அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மஹிந்தானந்த அளுத்கமகே, பிரேம்நாத் சி தொலவத்த ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அமைச்சர் காஞ்சன விஜேசேகர
“22 ஆவது திருத்தச் சட்டமூலம் இன்று நிறைவேற்றப்பட வேண்டும். இதனைக் குழப்பியடிக்க எவருக்கும் இடமளிக்கமாட்டோம்” – என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.
மஹிந்தானந்த அளுத்கமகே
“22 ஆவது திருத்தச் சட்டமூலத்தைப் பயன்படுத்தி ‘மொட்டு’க் கட்சிக்குள்ளும், அரசுக்குள்ளும் பிளவை ஏற்படுத்துவதற்கு எதிரணிகள் முயற்சித்தன. ஆனால், 22 நிறைவேறும். இதன்மூலம் எதிரணிகளின் கனவு கலைக்கப்படும்” – என்று மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி. தெரிவித்துள்ளார்.
பிரேம்நாத் சி தொலவத்த
“குழப்பிய குட்டையில் மீன்பிடிப்பதற்கு எதிரணிகள் முயற்சிக்கின்றன. அதற்கு இடமளிக்கமாட்டோம். இரட்டைக் குடியுரிமை தடைக்கு ஆதரவாக வாக்களிப்போம். பஸில் ராஜபக்சவுக்குத் தேவையெனில் அவர் இரட்டைக் குடியுரிமையைத் துறந்துவிட்டு வரட்டும்” – என்று பிரேம்நாத் சி தொலவத்த எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.