வவுனியாவில் கோதுமை மா அதியுச்ச விலை! – நுகர்வோர் கடும் விசனம்.

வவுனியா மாவட்டத்தில் பைக்கற்றில் அடைக்கப்பட்ட கோதுமை மாவை மாத்திரமே பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ள நிலையில் அதன் விலை 400 ரூபாவாகக் காணப்படுகின்றது என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 265 ரூபாவுக்கே விற்பனை செய்யப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் மாத்திரம் தனியார் வர்த்தக நிலையங்களில் அவ்வாறான விலை குறைப்பு செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கும் நுகர்வோர் தொடர்ந்தும் 400 ரூபாவுக்கே கோதுமை மாவைக் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவிக்கும் அவர்கள் கோதுமை மா மொத்த விற்பனை நிலையத்தைத் திடீர் பரிசோதனை செய்யும் போது பல உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளது எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக தனியார் வர்த்தக நிலைய உரிமையாளர்களிடம் கேட்டபோது,

“எமது வர்த்தக நிலையங்களுக்கு கோதுமை மா மொத்த விற்பனையாளர்களின் வாகனங்களிலேயே கோதுமை மா கொண்டு வரப்படுகின்றது. அவர்கள் பைக்கற்றில் அடைக்கப்பட்ட மாவே தம்மிடம் உள்ளது எனத் தெரிவிப்பதால் அதனையே நாம் கொள்வனவு செய்து நுகர்வோருக்கு வழங்க வேண்டியுள்ளது” – என்றனர்.

எனினும், இவ்வாறு கோதுமை மா மொத்த விற்பனையாளர்களால் வர்த்தக நிலையங்களுக்கு வழங்கப்படும் பைக்கற்றில் அடைக்கப்பட்ட கோதுமை மா பிறிதொரு முகவரியிடப்பட்டு காணப்படுவதால் தமக்குச் சந்தேகம் ஏற்படுகின்றது என நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, வவுனியா அரச அதிபர் இது தொடர்பில் கவனம் செலுத்தி திடீர் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ளும் போதே மக்களுக்கு விமோசனம் கிடைக்கும் எனவும் நுகர்வோர் மேலும் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.