அருணாச்சலப் பிரதேச மலை பகுதியில் ராணுவ விமானம் விழுந்து விபத்து.. மீட்பு பணிகள் தீவிரம்
இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் விமானம் அருணாசலப் பிரதேசத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. அம்மாநிலத்தில் உள்ள அப்பர் சியாங் மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதி கிராமம் ஒன்றின் மேல் பறந்து கொண்டிருந்த விமானம் காலை 10.43 மணி அளவில் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியுள்ளது.
விமானம் தீப்பற்றி எரிந்து அதில் புகை கிளம்பிய காட்சியை தூரத்தில் இருந்து சிலர் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்த ராணுவம் மீட்பு குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளது. விபத்து நிகழ்ந்த பகுதி அடர்ந்த மலைப்பகுதியாகும். அப்பர் சியாங் மாவட்டத்தில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ள அப்பகுதிக்கு சாலை வசதி இல்லை என்பதால் விமானம் மூலமும் வனப்பகுதி வழியாகும் மீட்பு குழுவினர் அங்கு விரைந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான விமானம் வழக்கமான ரோந்து பணிக்கு செல்வது என்பது மட்டுமே தெரிந்துள்ளது. இது HAL தயாரித்த ருத்ரா என்ற அதி நவீன இலகுரக விமானம் (Advanced Light Helicopter – ALH) ஆகும். விமானத்தில் எத்தனை பயணித்தனர், யாரெல்லாம் பயணித்தனர் போன்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இம்மாத தொடக்கத்தில், அருணாச்சல பிரதேசத்தில் தமாங் அருகே இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் விமானி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.