அதிக நன்கொடை வழங்கியவர்கள் பட்டியலில் ஷிவ் நாடார் முதலிடம்.. எவ்வளவு தொகை தெரியுமா?
இந்தியாவில் அதிக நன்கொடை வழங்கியவர்களின் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் கடந்த ஆண்டில் ரூ.1,161 கோடி நன்கொடையாக வழங்கிய ஹெச்.சி.எல் நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார் முதல் இடம் பிடித்துள்ளார்.
எடில்கிவ் ஹுருன் இந்தியா அமைப்பு ஆண்டுதோறும் இந்தியாவில் அதிக நன்கொடை வழங்கும் நபர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டில் அதிக நன்கொடை வழங்கியவர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக முதல் இடத்திலிருந்த விப்ரோ நிறுவனத்தின் நிறுவனர் அஸிம் பிரேம்ஜி- யை பின்னுக்கு தள்ளி ஹெச்.சி.எல் நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார் முதல் இடம் பிடித்துள்ளார். இவர் ரூ.1,161 கோடியை நன்கொடை வழங்கியுள்ளார். அதாவது ஒரு நாளைக்கு ரூ.3 கோடி என்ற விதம் இவர் நன்கொடை வழங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விப்ரோ நிறுவனத்தின் நிறுவனர் அஸிம் பிரேம்ஜி ரூ.484 கோடி நன்கொடை வழங்கி 2வது இடத்திலும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ரூ.411 கோடி நன்கொடை வழங்கி 3வது இடத்திலும் உள்ளனர்.
இந்தியாவில் பணக்கார வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் கௌதம் அதானி ரூ. 190 கோடி நன்கொடையாக வழங்கி 7வது இடத்தில் உள்ளார். ரூ.242 கோடி நன்கொடையாக வழங்கி 4வது இடத்தில் குமார் மங்களம் பிர்லா, 5 வது இடத்தில் ரூ.213 கோடி வழங்கி சுப்ரோதோ பாக்சி மற்றும் அவரது மனைவி சுஸ்மிதா உள்ளனர்.
ரூ.213 கோடி வழங்கி பார்த்தசாரதி மற்றும் அவரது மனைவி ராதா 6வது இடத்தில் உள்ளனர். மேலும் 8வது இடத்தில் ரூ.165 கோடி வழங்கி வேதாந்த குழுமத் தலைவர் அனில் அகர்வால் உள்ளனர். முதல் 10 இடத்தில் கடைசியாக, 9வது இடத்தில் ரூ.159 கோடி நன்கொடையாக வழங்கி நந்தன் நிலகனியும் 10வது இடத்தில் ரூ.142 கோடி வழங்கி ஏஎம் நாயக்- கும் உள்ளனர்.