அரசியல் கைதியான வைத்திய அதிகாரி சிவரூபனுக்குக் கொலை அச்சுறுத்தல்!
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகர் வைத்தியர் எஸ். சிவரூபனுக்குக் கொலை அச்சுறுத்தல் உள்ளது என்று நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியர் யாழ். போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றிய காலப் பகுதியில் சுமார் 300 வரையிலான கொலை, பாலியல் வன்புணர்வு , சித்திரவதைகள் உள்ளிட்ட வழக்குகளில் சட்ட வைத்திய அதிகாரியாக முக்கிய சாட்சியமாக உள்ளார்.
குறித்த வழக்குகளில் எதிரியாக உள்ளவர்கள் தெற்கில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்குகளின் முக்கிய சாட்சியாக உள்ள சட்ட வைத்திய அதிகாரியான வைத்தியர் எஸ். சிவரூபனும் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணைகளுக்காக எதிரிகளை யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீதிமன்றங்களுக்கு அழைத்து வரப்படும் போது, எதிரிகளுடன் சாட்சியும் ஒரே சிறைச்சாலை வாகனத்தில் அழைத்து வரப்படுகின்றனர்.
இந்தநிலையில், கிளிநொச்சியில் நீதிவான் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது ,எதிரிகளுடன் சாட்சியமான தன்னையும் ஒரு வாகனத்தில் அழைத்து வரப்படுவதால், தனது உயிருக்கு ஆபத்துள்ளது என்று நீதிமன்றத்தின் கவனத்துக்கு வைத்தியர் கொண்டு வந்தார்.
அதையடுத்து , வழக்குகளின் முக்கியமான சாட்சியமான சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்துமாறு சிறைச்சாலை ஆணையாளருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பளை வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகரான சின்னையா சிவரூபன் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
தமிழீழ விடுதலைப்புலிகளது மீள் உருவாக்கம், வெடிபொருள்களைப் பதுக்கி வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.
இவரது கைதைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவருடன் கைதான 7 முன்னாள் போராளிகளும் இரண்டு வருடங்களுக்குத் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குற்றச்சாட்டுக்கள் ஏதும் சுமத்தப்படாது அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் மருத்துவர் சிவரூபனின் விடுதலை திட்டமிட்டு இழுத்தடிக்கப்படுகின்றது எனக் குடும்பத்தவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.