தீபாவளி பரிசாக சோலார் தகடுகள்… ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வைர நிறுவனம்!
தீபாவளி பரிசாக சூரிய மின் தகடுகளை பரிசாக அளித்து 1000 ஊழியர்களின் வீடுகளில் ஒளியேற்றி வைத்து (வெளிச்சம்) ஊழியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் சூரத் தொழிலதிபர்.
தீபாவளியை முன்னிட்டு இந்தியாவில் உள்ள பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு போனாஸ், அன்பளிப்புகளை வழங்குகின்றன, சில நிறுவனங்கள் அத்தகைய பரிசுகளை என்றும் நினைவில் கொள்ளத்தக்க வகையில் வழங்குகின்றன.
அந்த வகையில், சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது நிறுவனத்தின் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு சூரிய மின் தகடுகளை(சோலார்) தீபாவளி பரிசாக வழங்கி அவர்களது வீடுகளில் ஒளியேற்றி வைத்துள்ளார், இது போன்ற தீபாவளி பரிசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகவும், மறக்க முடியாத பரிசுகளில் ஒன்றாகவும் பேசப்படுகிறது.
சூரத்தின் புகழ்பெற்ற வைரம் ஏற்றுமதி நிறுவனமான ஸ்ரீ ராமகிருஷ்ணா எக்ஸ்போர்ட்டர்-எஸ்ஆர்கே நிறுவனத்தின் உரிமையாளர் கோவிந்த்பாய் தோலாக்கியா, தனது நிறுவனத்தின் 1000 ஊழியர்களுக்கு தீப ஒளி திருநாள் பரிசாக சூரிய மின் தகடுகளை(சோலார்) வழங்கினார். தீபாவளி பரிசு ஊழியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து தொழிலதிபர் கோவிந்த்பாய் தோலாக்கியா கூறியதாவது: நிறுவனத்தின் ஊழியர்கள் எங்கள் குடும்பத்தில் ஒரு அங்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் மனதில் வைத்தும், அதிகரித்து வரும் எரிசக்தி பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு ஊழியர்களுக்கு இந்த தீபாவளி பரிசாக சூரிய மின் தகடுகள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது, அதை அவர்களின் வீடுகளில் நிறுவுவதன் மூலம் ஆண்டு முழுவதும் மின்சாரத்தை சேமிக்க முடியும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று கூறினார்.
மேலும், ஸ்ரீ ராமகிருஷ்ணா எக்ஸ்போர்ட்டரின்-எஸ்ஆர்கே அறக்கட்டளை மூலம் ஆகஸ்ட் மாதத்தில் 750 தியாகிகள் மற்றும் கரோனா முன்களப் பணியாளர்களுக்கு சூரிய மின் தகடுகளை பரிசாக வழங்கியுள்ளோம்.
வைரம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறையில் உலகில் நன்கு அறியப்பட்ட பெயர் எஸ்ஆர்கே. சுமார் 1.8 பில்லியன் டாலர் மூலதனம் கொண்ட இந்த நிறுவனம் தற்போது 6000 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது என கோவிந்த்பாய் தோலாக்கியா கூறினார்.
கார் மற்றும் பைக் பரிசு: சென்னையை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஜெயந்தி லால், தனது ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக கார் மற்றும் பைக்குகளை வழங்கியுள்ளார். அவர் தனது 8 ஊழியர்களுக்கு கார்களையும், 18 ஊழியர்களுக்கு பைக்குகளை பரிசளித்துள்ளார். இதற்காக மொத்தம் ரூ.1.20 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், கரோனா தொற்று கால நெருக்கடியின் போது ஊழியர்கள் தனக்கு முழு ஆதரவளித்ததாகவும், அவர்களுக்கு இப்போது செய்ய வேண்டியது எங்கள் கடமை என்று ஜெயந்தி லால் கூறினார்.
வீடுகள் பரிசு: குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி சாவ்ஜி தோலாக்கியா, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியன்று தனது ஊழியர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகளை வழங்குவதில் பிரபலமானவர். 2014 ஆம் ஆண்டில், அவர் தனது ஊழியர்களுக்கு 491 கார்கள் மற்றும் 207 பிளாட்களை போனஸாக வழங்கினார். 2016 ஆம் ஆண்டு தீபாவளியன்று தனது ஊழியர்களுக்கு 400 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 1260 கார்களை பரிசாக வழங்கினார். 2018 ஆம் ஆண்டு 3 ஊழியர்களுக்கு மெர்சிடிஸ் கார் பரிசாக வழங்கியுள்ளார்.