ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய 8 தமிழ் அரசியல் கைதிகளில் நால்வரே வீடுகளுக்கு!
ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய 8 தமிழ் அரசியல் கைதிகளில் நால்வர் முற்றுமுழுதாக விடுவிக்கப்பட்டு வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தீபாவளியையொட்டி ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் 8 தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான கடிதம் ஜனாதிபதி செயலகத்திலிருந்து சில தினங்களுக்கு முன்னர் சிறைச்சாலைகள் திணைக்களத்துக்குச் சென்றிருந்தது.
ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய 8 தமிழ் அரசியல் கைதிகளும் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களாவர். அவர்களில் நான்கு பேர் நேற்று முற்றுமுழுதாக விடுவிக்கப்பட்டு வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். ஏனைய நான்கு பேரும் விடுவிக்கப்படுவதில் சிறுசிறு சட்டச் சிக்கல்கள் நிலவுகின்றன.
இந்த நால்வரில் ரகுபதி சர்மா உள்ளிட்ட இருவர் தமது சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளனர். தற்போது அவர்கள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் முற்றுப்பெறாத நிலையில் உள்ளதாகவே கருதப்படுகின்றது. ஆதலால், நீதிமன்றில் அவர்கள் இருவரும் தமது சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டை திரும்பப் பெற்றதும் நீதிமன்ற நடவடிக்கைகள் முற்றுப்பெற்றதாகக் கருதப்பட்டு அவர்கள் இருவரும் விடுவிக்கப்படுவார்கள்.
ஏனைய இரண்டு பேருக்கும் நீதிமன்றம், கடூழியச் சிறைத்தண்டனையுடன் 6 மாதங்கள் புனர்வாழ்வும் வழங்கித் தீர்ப்பிட்டுள்ளது. ஆதலால், அவர்கள் புனர்வாழ்வுக்குச் செல்லாமல் விடுவிக்கப்படுவதாயின் ஜனாதிபதி செயலகத்திலிருந்து அறிவுறுத்தலொன்று வரவேண்டியுள்ளது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு நீதிமன்றத்தால் தமிழ் அரசியல் கைதி ஒருவர் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் ஆதாரத்துடன் சுமத்தப்படாததை அடுத்தே நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்” – என்றார்.