யாழில் கொள்ளை, திருட்டுச் சம்பவங்கள் இரண்டு மடங்காக அதிகரிப்பு!

யாழ். குடாநாட்டில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு அதிகளவான வழிப்பறி, கொள்ளை, திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸ் நிலையப் பதிவுகளிலிருந்து தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இவை இன்னும் அதிகரித்துள்ளன.
காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்கு உட்பட்ட காங்கேசன்துறை, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, இளவாலை, நெல்லியடி, தெல்லிப்பழை, அச்சுவேலி, பலாலி ஆகிய பொலிஸ் நிலையங்களில் கடந்த ஆண்டு 23 கொள்ளைச் சம்பவங்களும், 74 திருட்டுச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டு கடந்த மாதம் வரையில் 34 கொள்ளைச் சம்பவங்களும், 87 திருட்டுச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
கடந்த ஆண்டு இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகளவான முறைப்பாடுகளும், இந்த ஆண்டு தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகளவான முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன. இதில் கடந்த ஆண்டு 72 சம்பவங்களும், இந்த ஆண்டு 90 சம்பவங்களும் முடிவுறுத்தப்பட்டதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்துக்கு உட்பட்ட யாழ்ப்பாணம், சாவகச்சேரி, ஊர்காவற்றுறை, சுன்னாகம், மானிப்பாய், கொடிகாமம், கோப்பாய், வட்டுக்கோட்டை, நெடுந்தீவு ஆகிய பொலிஸ் நிலையங்களில் கடந்த ஆண்டு 64 கொள்ளைச் சம்பவங்களும், 234 திருட்டுச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டு கடந்த மாதம் வரையில் 53 கொள்ளைச் சம்பவங்களும், 418 திருட்டுச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இரண்டு ஆண்டுகளிலும் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிலேயே அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இதில் கடந்த ஆண்டு 206 சம்பவங்களும், இந்த ஆண்டு 240 சம்பவங்களும் முடிவுறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொருளாதார நெருக்கடி மற்றும் உயிர்கொல்லி போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களின் பணத் தேவை காரணமாகவே இந்தச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்கின்றன என்று பொலிஸார் கூறுகின்றனர்.