புலம்பெயர் தமிழ் மக்களைப் பாதிக்கின்றதாம் 22 ஆவது திருத்தச் சட்டம்!
“தமிழ்த் தேசம் எனப் பேசுகின்றபோது தாயகத்தில் இருக்கின்ற சனத்தொகையுடன், புலம்பெயர் தமிழ் மக்களும் அதன் ஓர் அங்கம். அவர்களைப் பாதிக்கும் இரட்டைப் பிரஜாவுரிமை தடை தீர்மானத்தை நாம் ஏன் ஏற்க வேண்டும். ஆகவே, 22 ஆவது திருத்தச் சட்டம் என்பது ஆட்சியில் உள்ள கள்ளக் கூட்டம் தம்மை ஜனநாயகவாதிகள் எனக் காட்ட எடுத்த ஒரு நாடகமாகும்.”
இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமனற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
வவுனியா ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மக்களின் முயற்சியால் 6 மாதங்களுக்கு மேலாக அவர்களின் போராட்டத்தின் நிமிர்த்தம் இந்த அரசு நாட்டை ஜனநாயக வழியில் மாற்றியமைக்க நடவடிக்கை எடுப்பதாகக் காட்ட வேண்டிய ஒரு பின்னணியில், அதுவும் எதிர்த்தரப்பு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு திருத்தம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னணியில்தான் அரசு அவசர அவசரமாக அது நடைபெறுவதற்கு முதல் ஆரம்பகட்டமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை 19 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் இறங்கியது.
அந்தப் பின்னணியில் 22 ஆவது திருத்தம் என்ற பெயரில் 21 ஆவது திருத்தமாக நிறைவேற்றப்பட்ட திருத்தமானது நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்பட்டது.
குறித்த விவாதத்தில், இந்தத் திருத்தத்துக்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாங்கள் எங்களுடைய ஆதரவைத் தரமுடியாது என்று பகிரங்கமாகத் தெரிவித்துவிட்டு வாக்கெடுப்பின் போது வெளிநடப்புச் செய்திருந்தோம்.
எங்களது நியாயப்பாடுகளை நாங்கள் பகிரங்கமாகப் பதிவு செய்திருந்தோம். இது தொடர்பில் பொதுமக்களுக்குச் சொல்லப்படுகின்ற காரணங்கள் நடைபெற்று இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும்.
முதலாவதாக நாட்டு மக்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் அதாவது அடிப்படையிலேயே அதனை மாற்றம் வேண்டும் எனப் போராடி இருந்த பின்னணியில் இந்த நிறைவேற்று அதிகாரங்களைக் குறைத்து நாடாளுமன்றத்துக்கு அதிகாரங்களைக் கொண்டு வருவதாகச் சுட்டிக்காட்டிதான் இந்தத் திருத்தத்தைக் கொண்டு வர முயற்சித்தார்கள்.
திருத்தம் உயர் நீதிமன்றத்துக்குச் சென்றதன் பின் எடுத்துப் பார்த்தால் ஜனாதிபதியினுடைய ஒரு அதிகாரத்தையும் அவர்கள் குறைக்கவில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகவே இருக்கின்ற நிலையில், அதில் இருந்து அதிகாரத்தைக் குறைத்ததாக எதுவுமே இல்லை என்பதுதான் எங்களுடைய முதலாவது வாதம்.
இரண்டாவதாக ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்தும் கோணத்தில் சுயாதீன ஆணைக்குழுக்களை அமைக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், அந்த ஆணைக்குழுக்களைப் பார்க்கும் போது அதனை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியின் கையில்தான் இருக்கின்றது. அதாவது ஜனாதிபதி விரும்பாவிட்டால் ஆணைக்குழுக்களைச் சிபார்சு செய்தாலும் நியமிக்கப்படாமல் இருக்கும். எனவே, நியமிப்பது ஜனாதிபதியின் கையில்தான் இருக்கின்றது. அதுமட்டுமல்லாது, அந்த ஆணைக்குழுக்களை நியமித்தாலும் கூட அரசு தரப்புக்குப் பெரும்பான்மை இருக்கும் வகையில்தான் அது தயாரிக்கப்பட்டுள்ளது. அப்படியெனில் சுயாதீனம் எங்கே இருக்கின்றது? சுயாதீனமும் கிடையாது. ஜனாதிபதி விரும்பாவிட்டால் அதனைப் பற்றி கதைத்து பிரயோசனம் அற்றது. அவ்வாறுதான் இந்த 22 ஆவது திருத்தச் சட்டம் அமைந்துள்ளது.
மூன்றாவதாக இரட்டைப் பிரஜாவுரிமை தடை அமுல் என்று சொன்னார்கள். இரட்டைப் பிரஜாவுரிமை உடையவர்கள் நாட்டில் முக்கியமான பதவிகளுக்கு வருவதைத் தடுத்துள்ளோம் என அவர்கள் சொன்னார்கள். தமிழ் மக்களைப் பொறுத்தவரை, எங்கள் மக்களைத் திட்டமிட்ட வகையில் இனவழிப்பபுச் செய்து, எமது மக்களை விரட்டியும் தள்ளியுள்ளீர்கள். தமிழ்த் தேசத்தின் அரைவாசி சனத்தெகை மேற்கு நாடுகளிலும், வெளிநாடுகளிலும்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் விரும்பிப் போகவில்லை. இங்கு வாழ முடியாதபடி திட்டமிட்டு துரத்தினார்கள்.
அந்த மக்கள், எங்களது மக்கள் எனத் தாயகத்தில் இருக்கும் மக்கள் சொல்கின்றார்கள். அவர்கள் இல்லாவிடின் நாங்கள் இல்லை. அரசு எங்களுக்கு உதவி செய்யவில்லை. முழுக்க முழுக்க எங்களது புலம்பெயர் தமிழ் மக்கள், எங்கள் மீது வைத்துள்ள பாசத்தாலும், எங்கள் உறவு என்ற வகையிலும் அந்த உதவிகளைச் செய்து வருகிறார்கள். எங்களை இங்கு படிக்க வைக்க முடியாத நிலையில் அவர்கள் எங்களை வெளிநாடுகளுக்கு அழைத்துப் படிக்க வைக்கின்றார்கள். எமது தேசத்தின் மூளையே புலம்பெயர்ந்து இருக்கின்ற நிலையில் அவர்களது பங்களிப்பு எங்களுக்கு அத்தியாவசியமானது.
இங்கிருந்து தப்பிபோன மக்கள் அந்த அந்த நாடுகளில் மிகத் திறைமையாகத் தங்களது தொழில் ரீதியாக வளர்ந்திருக்கும் நிலையில் எங்களது தேசத்தைக் கட்டியெழுப்ப அவர்களை வரவேற்க வேண்டும். அவர்கள் எங்களது தேசத்தவர்கள். அவர்கள் வெளிநாடுகளில் வாழ்வதாற்காக எங்களது தேசத்துடன் சம்பந்தம் இல்லை எனச் சொல்ல முடியாது.
தமிழ்த் தேசம் எனப் பேசுகின்ற போது தாயகத்தில் இருக்கின்ற சனத்தொகையுடன், புலம்பெயர் தமிழ் மக்களும் அதன் ஓர் அங்கம். நீங்கள் செய்த அநியாயத்தால், நீங்கள் கொள்ளையடிக்கக் கள்ளரை நியமித்தால் நாங்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும். எங்கள் தேசம் ஏன் பாதிக்கப்பட வேண்டும்.
நாங்கள் உங்கள் தேசத்தில் வந்து கொள்ளையடித்தோமா?, உங்கள் தேசத்தில் ஏதும் களவெடுத்தோமா? எங்களது உரிமைக்காகத்தான் நாங்கள் போராடுகின்றோம். எங்களுக்கு இருக்கக் கூடிய எங்களது சொத்தை நீங்கள் செய்த அநியாயத்துக்காக நாங்கள் ஏன் கைவிட வேண்டும். அதில் என்ன நியாயம் இருக்கின்றது. ஆகவே, இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பான தீர்மானம் எங்களது புலம்பெயர் உறவுகளைப் பாதிக்கும். அதனை நாம் ஏன் ஏற்க வேண்டும்.
எங்களைப் பொறுத்தவரை இந்தத் திருத்தம் என்பது முழுக்க முழுக்க போலிக் காரணத்தைக் காட்டி எந்தவித அங்கீகாரமும் இல்லாது, ஆட்சியில் உள்ள கள்ளக் கூட்டம் நிறைவேற்றியுள்ளது.
ஓர் ஆசனத்தைப் பெற முடியாத, வெல்ல முடியாத ஒரு கட்சியின் நியமன உறுப்பினர் இன்று ஜனாதிபதியாக வந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மக்கள் விரட்டியடிக்க இருந்த கள்ளக் கூட்டத்தால் நியமிக்கப்பட்டு, ஆட்சியைப் பிடித்தவருக்கு ஜனநாயகவாதிகள் எனக் காட்டிக்கொள்ள எடுத்த நாடகமே தவிர ஜனநாயகத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பப் புள்ளி கூட இதில் இல்லை.
அதைச் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு போவதற்குப் பதிலாக, சிங்களத் தலைவர்கள் மீண்டும் அவர்களை ஏமாற்றிய நிலையில், தமிழ்த் தலைவர்கள் உங்களை ஏமாற்றவில்லை. அந்த உண்மையை நாம் பதிவு செய்துள்ளோம்.
சரித்திர ரீதியாக சிங்கள மக்கள் திரும்பிப் பார்க்கும் போது நேர்மையாக இருந்தவர்கள் இந்த இரண்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி உறுப்பினர்கள் என்பதைக் காலம் காட்டும். இவ்வாறான நிலையிலேயே நாம் 22 ஆவது திருத்தச் சட்டத்தைப் புறக்கணித்து வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதைப் பதிவு செய்கின்றோம்” – என்றார்.