கேரளா பெண் போராளியை சிறைச்சாலைக்கு அனுப்பிய உடல் ஓவியம்!
கேரளாவில், ரெஹானா பாத்திமா என்ற பெண் சமூகப்போராளி, தனது இரண்டு மைனர் குழந்தைகளை , அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைய செய்து அதை காணொளியாக ஜூன் 2020 இல் சமூக ஊடக தளங்களில் வெளியிட்டார் என்ற காரணத்திற்காக சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
கேரளாவை சேர்ந்த ரெஹானா பாத்திமா, மரபுவழி இஸ்லாமிய குடும்பத்தில் 1986 இல் பிறந்தவர். இந்திரா காந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் இருந்து முதல் தரத்துடன் பி.காம் மற்றும் எம்சிஏ பட்டங்களை முடித்துள்ளார். 14 வயது மகன் மற்றும் எட்டு வயது மகள் என இரண்டு குழந்தைகளின் தாயாவார் ரெஹானா பாத்திமா. பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப வல்லுநராக மே 2020 வரை பணியாற்றி வந்தார். சபரிமலை பிரச்சினையை தொடர்ந்து கட்டாய ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கவிஞரும் புனே திரைப்பட நிறுவனத்தில் பட்டம் பெற்றவருமான இவரது கணவர் மனோஜ் கே ஸ்ரீதர் எழுதி இயக்கிய ‘ஏகா’ என்ற மலையாள படத்திலும் ரெஹானா நடித்துள்ளார். மாடலாகவும் பணி செய்து வருகிறார். ஒரு யூடியுப் சேனலும் நடத்தி வருகிறார்.
தனது அரை நிர்வாண உடலில், தனது குழந்தைகளை வைத்து ஓவியம் வரைவதைக் சமூகத்தளத்தில் வெளியிட்ட காணொளியை கண்ட வழக்கறிஞர் ஒருவர், பாலியல் குற்றங்களுக்கு எதிரான குழந்தைகள் தடுப்பு (போக்ஸோ) மற்றும் தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு தொடுத்தார். திருவல்லா காவல் நிலையத்திலும் இவர் மீது இதே செயலுக்காக மற்றொரு நபரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
” வீடியோவை பரப்பிய ரெஹானா பாத்திமாவின் முன் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, ரெஹானா எர்ணாகுளம் தெற்கு காவல் நிலையத்தில் போலீசார் முன் ஆஜரானார். பின்பு காவல்த்துறை அவரது அறிக்கையை பதிவு செய்தது. இந்த வழக்கில் ரிமாண்ட் செய்து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பபட்டார்.
காவல்துறையினர் அவரது இல்லத்தில் இருந்து வீடியோவை படமாக்க பயன்படுத்திய மொபைல் போண் மற்றும் வீடியோவை திருத்தி சமூக ஊடகங்களில் பதிவேற்றிய மடிக்கணினி ஆகியவற்றை மீட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் தடயவியல் ஆய்வகத்திற்கு மேலதிக பரிசோதனை மற்றும் உள்ளடக்கத்தை மீட்டெடுப்பதற்காக அனுப்பப்பட்டன.
கேரளா சமூகத்தளத்தில் இந்த வழக்கு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஒரு தாயாக இருப்பினும் தன் சொந்த குழந்தைகளை எந்த அளவிற்கும் எவ்விதம் வழிநடத்துகின்றனர் என்பதில் வரைமுறை உண்டு என்பதை காட்சி ஊடகங்களில் மற்றும் சமூக ஊடகங்களில் விவாதித்தனர். ஒரு குழந்தையின் வாழ்க்கையில் ஒரு தாயின் பங்கு எப்போதுமே முக்கியமானது என்பதை அவதானித்த கேரள உயர் நீதிமன்றம் நீதிபதி, உணர்ச்சிபூர்வமான குழந்தை சார்ந்திருக்கும் உறவாக இருப்பதால், பதிவுசெய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரெஹானா பாத்திமாவின் முன் ஜாமீன் மனுவை வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
காணொளியைப் பதிவேற்றுவதன் மூலம் ரெஹானா தனது குழந்தைகளுக்கு பாலியல் கல்வியைக் கற்பிப்பதாக தெரிவித்துள்ளார். பாலியல் கல்வி தனது வீட்டிலிருந்து தனது தாயின் உடலில் இருந்தே துவங்க வேண்டும் என வாதாடியுள்ளார். அதற்கு மறுமொழியாக நீதிபதி, “தாய் தனது வீட்டின் நான்கு சுவர்களுக்குள் இந்த செயல்களைச் செய்கிறாரா என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இச்ச்செயலை சட்டத்தால் தடைசெய்யப்படாவிட்டால், ஒவ்வொரு தாயும் தனது விருப்பத்திற்கு ஏற்ப பாலியல் கல்வியைக் கற்பிப்பது தனி சுதந்திரம் என்றாகி விடும் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றம் கருத்துப்படி , ஒரு தாயாக, வாழ்க்கையின் புயல்களை எதிர்கொள்ளும் வகையில் தங்கள் குழந்தைகளுக்கு உணர்ச்சிபூர்வமான உறுதுணையாக இருப்பது கடமையும் பொறுப்புமாகும். குழந்தைகளின் ஒரு தார்மீக திசைகாட்டியாக இருப்பது பெற்றோரின், குறிப்பாக தாயின் வேலை ஆகும்.
அதே வேளையில் “நீங்கள் பிரசங்கிக்கும் அதே தார்மீக விழுமியங்களின்படி உங்கள் வாழ்க்கையை வாழ்வதற்கும் நீங்களே பொறுப்பு, அதுதான் குழந்தைகள் கற்றுக் கொள்ளும் ஒரே வழி. மனுதாரருக்கு தனது தத்துவத்தின் படி தனது குழந்தைக்கு கற்பிக்கும் சுதந்திரம் கிடைத்துள்ளது. ஆனால், அவை அவரது வீட்டின் நான்கு சுவர்கள் இருக்க வேண்டும். அவை பொது வெளியில் வெளியிடும் போது அரசின் சட்டத்தை மீறுகிறதா என்பதையும் நீதிமன்றம் கவனிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
“அவைகளில் தன் குழந்தைகளிடம் ஆழ்ந்த அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, மற்றும் பாதுகாப்பு அடங்கியுள்ளது. ஒரு குழந்தை பிறக்கும்போது, வெளி உலகத்தைப் பற்றி அவருக்கு முற்றிலும் தெரியாது. தாய் அவரை உலகிற்கு அறிமுகப்படுத்துவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார். குழந்தை வாழ்க்கையை நோக்கி உருவாகும் கண்ணோட்டம் தாயைப் பொறுத்தது. அவரது அணுகுமுறை, அவரது கருத்துக்கள் – மதம் என்பது வேறு – வாழ்க்கை குறித்த அவரது பார்வை மற்றும் அதன் குறிக்கோள்கள் அனைத்தும் அவளிடமிருந்து பெறப்படும்” என்று ஒரு நல்ல தாய்க்கு இருக்க வேண்டிய சிறப்பான குணங்கள் பற்றி இப்படி நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது.
மூத்த அரசு வழக்கறிஞர் சுமன் சக்ரவர்த்தி, ஆபாச நிகழ்ச்சிகள் மற்றும் பொருட்களில் குழந்தைகளை சுரண்டுவதைத் தடுக்க போக்ஸோ சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்று ஆவணங்களை சமர்ப்பித்தார். வீடியோவில், மனுதாரர் நிர்வாணமாக படுத்துக் கொண்டுள்ளார். அவரது இரண்டு குழந்தைகள், 14 வயது மகன் மற்றும் 8 வயதுடைய பெண்குழந்தை அவரது நிர்வாண உடலில் ஓவியம் வரைந்து வருகின்றனர். இந்த வீடியோவை மனுதாரர் படம்பிடித்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தையும் அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் கூட மேற்கோள் காட்டி மனுதாரரின் வாதத்தை அரசு வழக்கறிஞர் எதிர்த்ததாக நீதிமன்றத்தை சுட்டிக்காட்டியுள்ளது.
நீதிபதி பி.வி.குனிகிருஷ்ணனின் கருத்து , “குழந்தைகளை பாலியல் திருப்தி நோக்கத்திற்காகப் பயன்படுத்தினார், ஏனென்றால் அவர்கள் வீடியோவில் தங்கள் தாயின் நிர்வாண உடலில் ஓவியம் வரைவதால் அவர்கள் அநாகரீகமாகவும் ஆபாசமாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள்.” இந்த வழக்கில் கூறப்படும் குற்றங்கள் POCSO சட்டம், 2012, சிறார் நீதி (குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015, மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 இன் விதிகளின் கீழ் உள்ளன.
ஆகஸ்ட் 2020 இல், இந்திய உச்ச நீதிமன்றம் ரெஹானா பாத்திமாவின் முன் ஜாமீன் விண்ணப்பத்தை மறுத்ததுடன், அவர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி ஆபாசத்தை பரப்புவதாகவும் மேற்கோள் காட்டி கேரள உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து பின்னர் அவரை சிறைக்கு அனுப்பியுள்ளது.
ரெஹானா பாத்திமா இதற்கு முன்னும் சமூக புரட்சி, பெண் விடுதலை, என்ற பெயரில் விவாதங்களுக்கு இட்டு சென்ற பல போராட்டங்களில் பங்கு பெற்றவர் ஆவார்
2016 ஆம் ஆண்டில், திரிசூரில் நடைபெறும் ஒரு பிரபலமான நிகழ்வான புலி ஆட்டத்தில் கேரள வீதிகளில் ஆண் சகாக்களுடன் உடல் ஓவியக்கலை என்ற பெயரில் அரை நிர்வாணமாக பங்கேற்பதன் மூலம் ஆண் ஆதிக்கத்தின் கோட்டைகளை சவாலாக்க ரெஹானா முயன்றார்.
அதே போன்று 2014ல் கொச்சியில், தார்மீக பொலிஸுக்கு எதிராக சர்ச்சைக்குரிய ’கிஸ் ஓஃப் லவ்’ போராட்டத்தில் பாத்திமா மற்றும் அவரது துணைவர் மனோஜ் கே ஸ்ரீதர் ஆகியோர் பங்கேற்று செய்திகளில் இடம் பிடித்தனர்.
2018 ஆம் ஆண்டில், கோழிக்கோடு ஃபாரூக் பயிற்சி கல்லூரியின் முஸ்லீம் ஆண் உதவி பேராசிரியர் ஜவஹர் என்பவர், பெண்களின் மார்பகங்களை தர்பூசணிகளுடன் ஒப்பிட்டு, முஸ்லீம் பெண்கள் சரியாக ஆடை அணியவில்லை என சொன்னதற்கு பாத்திமா தர்பூசணி அணிந்த மார்புடன் பதிலளித்தார்.
அக்டோபர் 2018 இல், ஃபேஸ்புக்கில் ஒரு சபரிமலை பெண் பக்தை ஆடையில் ‘ஆபாசமான போஸில்’ அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதற்காக ‘மத உணர்வுகளை புண்படுத்தினார்’ என்ற காரணத்தினால் பாத்திமா கைது செய்யப்பட்டு 18 நாட்கள் சிறையில் இருந்துள்ளார், பின்னீடு ஜாமீனில் வெளியே வந்தார்.
தற்போதும் யூடிப்பில் அரைகுறை உடையுடன் சமையல் நிகழ்ச்சி நடத்தி வந்த நிலையில் சொந்த குழந்தைகளை ஆபாசத்திற்காக பயண்படுத்தினார் என்ற காரணத்திற்காக மறுபடியும் சிறை சென்றுள்ளார்.