முறைப்படி திருமணம் செய்து பதிவு செய்தால் தான் திருமணம் செல்லும் – நீதிமன்றம்-

கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேலப்பாளையம் பகுதியில் பெண் ஒருவர் கல்லூரி படித்து வந்துள்ளார். அப்போது தனது உறவினர் அப்துல் ஹமீது என்பவர் நான் படிக்கும் கல்லூரிக்கு வந்து எனது தாயாருக்கு அடிபட்டு விட்டதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி என்னை கல்லூரியில் இருந்து அழைத்து சென்றார். ஆனால், மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் பாளையங்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு என்னை அழைத்து சென்ற அப்துல் ஹமீது, கட்டாயப்படுத்தி என்னை புகைப்படம் எடுக்க வைத்ததோடு மிரட்டி ஆவணங்களில் கையெழுத்து பெற்றார்.

திருமண சான்றை வைத்து தன்னை மிரட்டுவதாக புகார் தெரிவித்த அவர், தனது விருப்பமில்லாமல் திருமண பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதால் இந்த திருமண சான்றிதழை ரத்து செய்ய பத்திர பதிவுத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி விஜயகுமார் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழ்நாடு பதிவு திருமணம் சட்டத்தின் படி பதிவு திருமணம் வழங்கப்படும் விண்ணப்பம் ஜமாத் உடைய பெயர் மற்றும் அதன் முகவரி இடம்பெற்றிருக்க வேண்டும் விண்ணப்பம் திருமணம் செய்தவர்களின் ஒப்புதல் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பம் இரண்டில் ஏற்கனவே இரண்டு தம்பதியினருக்கு இடையே நிச்சயதார்த்தம் செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இடம் பெற்று இருக்க வேண்டும் இவை அனைத்தும் சரிவர பின்பற்றியே திருமணம் பதிவு செய்ய இயலும்.

எந்த ஒரு மதத்தினை பின்பற்றக் கூடியவர்களாக இருந்தாலும் அவரவர் மதத்திற்குரிய முறையில் திருமணம் நடைபெற்ற பிறகு பத்திரப்பதிவு திருமணம் நடத்த முடியும்.

அந்தந்த மதத்திற்கான திருமண முறைகளை பின்பற்றி திருமணம் நடைபெறாமல் நேரடியாக பத்திரப்பதிவு துறையில் திருமணம் பதிவு செய்ய முடியாது. இஸ்லாமியர்களை பொறுத்தவரை குறிப்பிட்ட ஜமாத்தில் அனுமதி பெற்று அவர்களுடைய முறையின்படி திருமணம் செய்யப்பட்டு அதன் பின்னர் தான் பதிவு செய்ய முடியும்.

பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் பதிவுதிருமணத்திற்காக வரும் ஜோடிகள் அந்தந்த மதத்திற்கான சட்ட திட்டங்களை பின்பற்றி திருமணம் நடைபெற்ற பிறகு பதிவு திருமணம் செய்ய வருகிறார்களா? என்பது குறித்து முறையாக விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், இந்த வழக்கை பொறுத்தவரை இஸ்லாமியர் சட்டத்திட்ட நெறிமுறைகளை பின்பற்றி திருமணம் நடைபெறவில்லை எனவே திருமண பதிவு செய்யப்பட்ட சான்றை ரத்து செய்யப்படுகிறது. இதற்கான முழு ஆவணங்களையும் பதிவுத் துறையில் இருந்து நீக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.