சூரிய கிரகணம் – அக்டோபர் 25ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்த அரசு!
வரும் 25ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழவுள்ளதால் ஒடிசாவில் பொது விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஒடிசா அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சூரிய கிரகணம் ஏற்படுவதால் வரும் செவ்வாய் கிழமை அன்று அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், நீதிமன்றம், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் கோனார்க்கில்(Konark) தான் புகழ்பெற்ற சூரியன் கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சூரியன் – சந்திரன் – பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணம் என்பது ஏற்படும். அறிவியல் படி சந்திரனானது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வரும் போது சந்திரனால் சூரியன் மறைக்கப்படுவதால் பூமியில் உள்ள நம் கண்களுக்கு சூரியன் தெரியாமல் போகின்றது.
இதையே சூரிய கிரகணம் என்கிறோம். அமாவாசை அன்று தான் இந்த சூரிய கிரகணம் நிகழும். வரப்போகும் சூரிய கிரகணமானது இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் தெரியும். அந்தமான் மற்றும் நிகோபார் மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களை தவிர ஏனைய மற்ற பகுதிகள் அனைத்திலும் சூரிய கிரகணம் தெரியும்.
தமிழகத்தில் மாலை 5.14 மணிக்கு ஏற்பட தொடங்கும் சூரிய கிரகணம் 30 நிமிடங்களை வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.