கத்தியால் குத்தப்பட்ட எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண் பார்வை பறிபோனது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி (75) கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த போது திடீரென மர்ம நபர் ஒருவர் அவரை கத்தியால் சரமாரியாக குத்தினார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ருஷ்டி நிலைகுலைந்து கீழே விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக அவரது மகன் ஜாபர் ருஷ்டி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த கொடூர தாக்குதல் காரணமாக சல்மான் ருஷ்டி ஒரு கண் பார்வையை இழந்து விட்டதாகவும், அவரது ஒரு கை செயலிழந்துள்ளது என்றும் ருஷ்டியின் புத்தக விற்பனை முகவர் ஆண்ட்ரூ வைலி செய்திதாள் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ருஷ்டிக்கு ஆழமான காயங்கள் இருந்தன, ஒரு கண் பார்வையை இழந்து விட்டார், நரம்புகள் வெட்டப்பட்டதால் ஒரு கை செயலிழந்துள்ளது. அவரது மார்பு மற்றும் உடற்பகுதியில் 15 காயங்கள் உள்ளன என்றும், ஆண்ட்ரூ கூறியுள்ளார். எனினும் ருஷ்டி இன்னும் மருத்துவமனையில் இருக்கிறாரா என்ற கேள்விக்கு அவர் எங்கிருக்கிறார் என்ற எந்த தகவலையும் கொடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.