நாடு மீண்டெழ அனைவரும் கைகோர்த்துக்கொள்வோம்! – தீபத் திருநாளில் ஜனாதிபதி அழைப்பு.
“நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்த்துக்கொள்ள வேண்டும் என்று தீபத் திருநாளில் அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் கூறியுள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“வண்ண மயமான கலாசார நிகழ்வான தீபாவளி நன்னாளில் வாழ்த்து தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
அஞ்ஞானம் நீங்கி, மெய்ஞானம் பிறக்க வேண்டும் என்பதற்காக இந்துக்கள் இந்நன்னாளில் தங்களின் இல்லங்கள், கோயில்கள் என அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்றி, தீபத்திருநாளைக் கொண்டாடுகின்றனர்.
ஒளியால் மட்டுமே இருளை நீக்க முடியும். அதேபோல நம் தாய் நாட்டை முன்னொருபோதும் இல்லாத விதத்தில் சூழ்ந்திருக்கும் இருளை விரட்டி, ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயற்பட வேண்டும்.
சுபீட்சமான ஒரு நாட்டிற்கு சமாதானம், ஒற்றுமை, சகோதரத்துவம் என்பன மிகவும் முக்கியமானவை.
இனம், மதம், கட்சி, நிறம் என்ற பிரிவினையின்றி, நம் வாழ்விலும், நாட்டிலும் சூழ்ந்திருக்கும் இருளை நீக்க வேண்டும்.
இதனைக் குறிக்கோளாகக் கொண்டு, நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். இதற்கு அனைவரும் கைகோர்த்துக்கொள்ள வேண்டும் என்று இந்தத் தீபத் திருநாளில் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.
இம்முறை தீபாவளிப் பண்டிகையானது அனைவரது அபிலாஷைகளையும் பூர்த்தி செய்து, இலங்கையைச் சௌபாக்கியம் நிறைந்த நாடாக உருவாக்கும் சிறந்த எதிர்காலத்தின் தொடக்கமாக அமைய வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.
தீபத்திருநாளைக் கொண்டாடும் உங்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்” – என்றுள்ளது.
இதையும் படியுங்கள்:சோமாலியா நாட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்- 9 பேர் உயிரிழப்பு….