‘மொட்டு’ – ‘யானை’ புதிய கூட்டணி?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உள்ள முக்கிய சில புள்ளிகள், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து புதியதொரு கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் எனத் தெரியவருகின்றது.
இதற்கான பேச்சுகள் வெற்றியை நோக்கி நகர்கின்றன எனவும், ஐ.தே.கவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான ரவி கருணாநாயக்கவின் மத்தியஸ்தத்துடனேயே பேச்சுகள் தொடர்கின்றன எனவும் சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்த வருடம் ஆரம்பத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இந்தக் கூட்டணி போட்டியிடும் எனவும், ‘அன்னம்’ புதிய கூட்டணியின் சின்னமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
கண்டி, கம்பஹா, காலி, பொலனறுவை, பதுளை, கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் உள்ள மொட்டு கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் இந்தக்கூட்டணியில் இணையவுள்ளனர்.
அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய தூண்களில் ஒருவரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும், விரைவில் தீர்க்கமானதொரு அரசியல் முடிவொன்றை எடுக்கவுள்ளார் எனவும் அறியமுடிகின்றது.