காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கு முடிவின்றி எமக்குத் தீபாவளி இல்லை! வவுனியாவில் உறவுகள் கதறல்.
காணாமல்போன எமது பிள்ளைகளுக்கு முடிவின்றி எமக்குத் தீபாவளி இல்லை என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
வவுனியாவில் பிரதான தபாலகத்துக்கு அருகாமையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தீபாவளித் திருநாளான இன்று, தமது பிள்ளைகளும், உறவுகளும் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கான நீதி கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
“நமது சைவ மதத்தில், அரக்கன் நரகாசுரனை வென்றமைக்கவே தீபாவளி கொண்டாடப்படுகின்றது. ஆனால், உண்மையில் கடந்த காலத்தில் தமிழர்களைக் கொன்ற அரக்கர்கள் இறந்த இந்த நாளை நாம் கொண்டாடுகின்றோம். அவர்களில் சிலரை நாம் பட்டியலிடலாம்.
நமக்குச் சுதந்திரம் கிடைத்ததும், நாம் அனைவரும் இந்தத் தீயவர்கள் ட்டியலை உருவாக்குவோம் .
வருங்காலத்தில், தமிழர்களைக் கொன்ற அரக்கர்களை, குறிப்பாக 2009ஆம் ஆண்டு அரக்கர்களையும் , நமது சுதந்திரப் போரை முறியடிக்க உதவிய தமிழ் அரக்கர்களையும் நினைவுகூரும் இந்த நாளைத் தமிழர்களாகிய நாம் கொண்டாடுவோம்.
இந்த நாள் பேய்களை வென்றதைக் கொண்டாடும் நாள். தமிழர்களுக்கு என்ன வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் ஐ.நாவின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்துவதன் மூலம் மட்டுமே இந்த நாளை நாம் எதிர் காலத்தில் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட முடியும்” – என்றனர்.