சாப்பாடு சரியில்லை என்று சண்டை… வாடிக்கையாளர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய உரிமையாளர்
உணவு சரியாக இல்லை என்று புகார் கூறிய வாடிக்கையாளர் மீது ஹோட்டல் உரிமையாளர் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒடிசா மாநிலம் கட்டக்கில் இருந்து 45 தொலைவில் உள்ள பலிசந்திராபூர் என்ற கிராமத்தில் வசிப்பவர் பிரசந்த்ஜித் பரிதா.
இவர் கடந்த சனிக்கிழமை உள்ளூரில் உள்ள ஹோட்டலுக்கு உணவருந்த சென்றுள்ளார். சாப்பிட்டு பார்த்த பரிதா, உணவு சரியாக இல்லை என புகார் தெரிவித்துள்ளார். அந்த ஹோட்டலின் உரிமையாளரான பிரவாகர் சாஹூ என்பவரிடம் காசுக்கு ஏற்ப உணவு ருசியாக இல்லை. இப்படியா சமைத்து தருவது எனக் கேட்டுள்ளார். இது பேச்சு இருவருக்கும் இடையே வாக்குவாதமாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஹோட்டலின் உரிமையாளர் பிரவாகர், அடுப்பில் வைக்கப்பட்டிருந்த கொதிக்கும் எண்ணெய்யை புகார் கொடுத்த வாடிக்கையாளர் பிரசன்ஜித் மீது ஊற்றியுள்ளார்.
ஹோட்டல் உரிமையாளரின் செயலால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், பாதிக்கப்பட்ட பிரசன்ஜித்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் தற்போது கட்டக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எண்ணெய் உடலில் பட்டதில் பிரசன்ஜித்தின் முகம், கழுத்து, மார்பு, வயிறு,கைகள் என பல பகுதிகளிலும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அப்பகுதி காவல்துறையினர் தலைமறைவாகியுள்ள ஹோட்டல் உரிமையாளர் பிரவாகரை தேடி வருகின்றனர்.