சூரிய கிரகணத்தை வெறுங்கண்ணால் பார்த்தால் பார்வை இழக்க நேரிடும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை
சூரிய கிரகணத்தை வெறுங்கண்ணால் பார்த்தால் பார்வை இழக்க நேரிடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக , தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று பகுதி சூரியகிரகணம் நிகழவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் தெற்கு பகுதிகள், கஜகிஸ்தான், ஐரோப்பிய நாடுகள், வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசியாவின் சில பகுதிகள் ஆகிய இடங்களிலிருந்து இந்த சூரிய கிரகணத்தை காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில், 14:19 (IST)மணிக்கு ஆரம்பித்து, 18:32 (IST)மணிக்கு முடியும் என்றும், ரஷ்ய நாட்டின் மத்திய பகுதிகளில் சூரியனை 80 விழுக்காடு சந்திரன் மறைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் இந்திய நேரப்படி 5.14 மணிக்கு தொடங்கி 5.44 மணிக்கு மறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி சூரியனை பார்க்க கூடாது?
மேலும், சூரியனை கிரகணத்தின் போதோ, சாதரணமாகவோ வெறுங்கண்களாலோ அல்லது தொலைநோக்கி அல்லது பைனாகுலர் மூலமாகவோ காணக்கூடாது. அப்படி செய்தால் கண் பார்வை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எப்படி பார்க்க வேண்டும்?
சூரிய ஒளியை ஒரு சிறிய துளையிட்ட அட்டை ஒட்டப்பட்ட கண்ணாடி மூலம் இருண்ட அறையில் பாய்ச்சி சூரியனின் பிம்பத்தையும், கிரகணத்தையும் காணலாம் என கூறப்பட்டுள்ளது.
மீண்டும் 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி தான் சூரிய கிரகணத்தை காணமுடியும்.
சந்திர கிரகணம்
மேலும், வரும் நவம்பர் 8ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழவுள்ளதாகவும், இந்திய நேரப்படி 2.39 மணிக்கு தொடங்கி 6.19 மணிக்கு முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 5.38 மணிக்கு தான் தென்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சந்திரகிரகணத்தை காண தொலைநோக்கி போன்ற கருவிகளோ, கண்களை காத்துகொள்ள தனிப்பட்ட கவனமோ தேவையில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீண்டும் அக்டோபர் மாதம் 28ஆம் தேதி 2023ஆம் ஆண்டு தான் சந்திர கிரகணத்தை காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.