அண்ணாதுரையை இடியட் என பதிப்பாளர் பத்ரி விமர்சித்தது தவறு – ராமசுப்பிரமணியன் கருத்து
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திமுகவை தொடங்கியவருமான அண்ணாதுரையை இடியட் என பதிப்பாளர் பத்ரி சேஷாத்திரி விமர்சித்தது தவறு என்று கல்வியாளரும் அரசியல் விமர்சகருமான ராமசுப்பிரமணியன் கருத்து தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் பிராமணர்களுக்கு கெடுதல் ஏற்பட்டால் அதற்கு பத்ரிதான் பொறுப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.
பத்ரி சேஷாத்திரி கிழக்கு பதிப்பகம் மூலம் பல்வேறு புத்தகங்களை பதிப்பிட்டு வருகிறார். இந்நிலையில், தனது சமூக ஊடக பக்கத்தில், அண்ணாவின் இந்தி எதிர்ப்பு கொள்கையை விமர்சித்து அவர் பதிவிட்டிருந்தார். அதில், அண்ணாவை இடியட் என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இதையடுத்து, தமிழ் இணையக் கல்வி கழக ஆலோசனை குழுவிலிருந்து பத்ரியை நீக்கம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கல்வியாளரும் அரசியல் விமர்சகருமான ராமசுப்பிரமணியன் இந்த நிகழ்வை குறிப்பிட்டு தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ஹிந்தியைப் பற்றி தமிழ்நாடு முன்னாள் முதல்வர், திமுக நிறுவனர் அண்ணாதுரை 1960 களில் தெரிவித்த கருத்து பற்றி அவரை முட்டாள் ( idiot) என்று எழுதும் அளவிற்கு கிழக்குப் பதிப்பகம் உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி தனது ட்விட்டரில் தெளஷ்டிண்யமாக பதிவு செய்தது பெரிய பிரச்சனைக்குரியதாகியுள்ளது. அப்படித்தான் ஆகும்.
அவர் இப்படி கருத்து தெரிவித்தது மிகவும் கண்ணியமற்ற, தரக்குறைவான செயல். நான் இதை மிகவும் கண்டிக்கிறேன். ஆனால் அவர் தான் கூறியது குற்றமில்லை என்று வாதிடுவது அவர் மாண்புக்கு மிகவும் இழுக்கு. திமிர்தண்டித் தனத்தின் உச்சம்.
இதையடுத்து அவரை தமிழ்நாடு அரசு ஒரு தொழில்நுட்ப குழுவில் உறுப்பினராக இருந்ததை நீக்கியுள்ளது. இது எதிர்பார்த்த ஒன்றே. இதில் தவறு காண இயலாது. தங்கள் கட்சியின் மாபெரும் தலைவரை இவ்வளவு துச்சமாக கருத்துத் தெரிவித்ததற்கு எதிர்வினை.
சேஷாத்ரி ஒரு அந்தணர். அவர் இப்படிக் கருத்துத் தெரிவித்ததற்கு பல கண்டனக் குரல்கள் வருகின்றன. இதுவும் எதிர்பார்க்கப்பட்டதே.
ஆனால் பேராசிரியர். சு ப வீரபாண்டியன் பத்ரி பூணூலை கத்திரிக்க வேண்டும் என்று பேசியது ஏற்க இயலாது. அதாவது ஒட்டுமொத்த அந்தணர் சமூகத்தின் பிரதிநிதியாக பத்ரியைக் கருதி இப்படிப் பேசியிருக்கிறார். பத்ரி அந்தணர். அவ்வளவே. அவர் பேசியது அந்தணர் சமூகத்தின் குரலாக எடுத்துக் கொண்டு எதிர்வினை ஆற்ற பூணூல் அறுப்பு போன்ற கண்டனக் குரல் எழுப்புவதை ஒரு போதும் ஏற்க இயலாது. அவர் பேச்சை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இவ் விஷயத்தில் பாஜக பத்ரிக்கு ஆதரவாகப் பேசுவதும் ஏற்க இயலாது. பாஜக தமிழகத் தலைவர் அல்லது தேசியத் தலைவரை இப்படிப் பேசியிருந்தால் பாஜக மிகப்பெரிய போராட்டத்தில் அல்லவா குதித்து, இதைத் தேசியப் பிரச்சனையாக, பூதாகாரமாக அல்லவா ஆக்கியிருக்கும். ஆகவே பாஜக இந்த விஷயத்தில் நியாயமாகவும், நேர்மையாகவும் நடப்பது என்பது மெளனம் அல்லது பத்ரிக்குக் கண்டனம் தெரிவிப்பது என்பதே ஆகும். பத்ரியை குழுவில் இருந்து அரசு நீக்கியது தவறு என்று சித்தரிப்பதே தவறு.
ஆரம்பத்தில் பாஜக ஆட்சியை விமர்சனம் செய்தார் என்பதால் சுமன் சி ராமனை தூர்தர்ஷன் விளையாட்டுப் போட்டி வினாடி வினா நடத்தும் பணியிலிருந்து தமிழ்நாடு பாஜக தந்த அழுத்தத்தால் நீக்கியது பற்றி எல்லோருக்கும் தெரிந்தது தானே!
மீண்டும் சொல்கிறேன். நல்ல வசதியான, அந்தணர் குடும்பத்தைச் சேர்ந்த பத்ரி அண்ணாதுரை பற்றி இழிவாகப் பதிவிட்டது மிக மிகத் தவறு. அந்தணர் குலத்தைச் சேர்ந்த ராஜாஜி அண்ணாதுரையுடன் கூட்டணி அமைத்து திமுக ஆட்சிக்கு வழிவகுத்தது எல்லோருக்கும் தெரிந்ததே.
பத்ரியின் கருத்து ஒட்டுமொத்த பிராமணர் சமூகத்திற்கே கேடு விளைவிக்கும். இவர் இப்படிப் பேசி விடுவார். ஆனால் சாதாரண கோயில் குருக்கள், பரிசாரகர்கள், ஏன் பிணம் தூக்கும் பிராமணர்கள், அடித்தட்டு நிலையில் உள்ள பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பூணல் அறுக்கப்பட்டாலோ, அவர்களுக்குக் கெடுதல் ஏற்படுத்தப் பட்டாலோ அதற்கு பத்ரி தான் பொறுப்பேற்க வேண்டும்.
பணக்கார, அந்தஸ்து மிக்க பிராமணர்கள் அவதிப்படுவதில்லை. ஏழை பிராமணர்களே easy targetsகளாக ஆக்கப்படுகின்றனர். அவர்களுக்கு இழிவும் அவமானமும் ஏற்பட்டால் பத்ரி போன்றவர்கள் என்ன செய்வார்கள்? ஒன்றும் செய்ய இயலாது, மாட்டார்கள். ஆகவே ஆதரவற்ற ஏழை பிராமணர்களுக்கு கெடுதல் ஏற்படாத வகையில் பத்ரி போன்றவர்கள் இனியாவது பொறுப்புடன் நடக்க வேண்டும். ஏனெனில் தமிழ்நாட்டில் பிராமணர்கள் எதிர்ப்பு இன்னும் வலுவாகவே உள்ளது.
தாம்ராஸ் நாராயணனும் இது போன்ற விஷயங்களில் சரியான அணுகுமுறையைக் கடைபிடிப்பதே நல்லது. இவ் விஷயத்தில் அவர் அறிக்கை வழ வழி கொழகொழா என்று தான் உள்ளது. ஏற்கத்தக்கது அல்ல.மற்ற எந்த ஜாதிக்கும் இல்லாத தாக்குதல் ( நேரடியாகவும், மறைமுகமாகவும்) அந்தணர்களுக்கு ஏற்படும் நிலையில் அந்தண குலத்தைச் சேர்ந்த யாரும் திமிர் பிடித்துப் பேசுவதோ எழுதுவதோ கூடாது. சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்” என கூறியுள்ளார்.